இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். அதில், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் நன்மை பயக்கும் நியூட்ரினோ திட்டத்தை தேனியில் செயல்படுத்த வேண்டும், முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள மாநில காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரங்களை தடுத்து தமிழகத்தின் உரிமையை காத்திட வேண்டும், தமிழக கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும், தேனி மாவட்டம் டொம்புச்சேரி கிராமத்தில் உள்ள தலித் சமுதாயத்தினரை கட்டாய மதமாற்றம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. மேலும், இந்தக் கோரிக்கைகள் மீது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை வேண்டும் எனக் கூறி தேனி மாவட்ட ஆட்சியர் வாயிலாக மனு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், “தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி கிராமத்தில் மத அடிப்படையிலான தீவிரவாத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். அவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை கடத்தும் செயல்களிலும் ஈடுபடு வருகின்றனர். எனவே, தேனி மாவட்டத்தில் மதமாற்ற செயல்களில் ஈடுபடுத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு, மாநில அரசுகளுக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பாஜக ஆளும் மாநிலங்களில் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் நிர்பந்தத்தால் தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் நேரு பேசியிருப்பது தவறான கருத்து.
ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கடந்த 9 மாதங்களில் தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகத்தில் ஒவ்வொருவர் மீதான கடன் சுமை ரூபாய் 70ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதற்கு அமெரிக்கா, உலகப் பொருளாதாரத்தை காரணம் காட்டுகின்றனர். அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த 9 பேர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். அதிமுகவின் மினி அமைச்சரவையாக கருதப்படும் திமுக அமைச்சரவையில் அவ்வளவு திறமையானவர்கள் உள்ள நிலையில், தற்போதைய நிதி அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை மாற்றம் செய்ய வேண்டும்.
வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என துபாய் பயணம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் நிதி அமைச்சரை அழைத்து செல்லவில்லை. அதே நேரத்தில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பிற்கு மட்டும் சென்று அவருடன் சண்டையிட்டு வருகின்றார். மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கும். எனவே தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை மாற்றம் செய்துவிட்டு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் நிதி அமைச்சரை நியமிக்க வேண்டும்” என்று கூறினார்.