தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மட்டுமல்ல, 2026 ஆம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை. இதனால் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கத் தயார். அதே சமயம் சிறுபான்மை மக்களைச் சந்தித்து கட்சியின் நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவிக்க வேண்டும். மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துவிடும் என்ற சந்தேகம் மக்களுக்கு இருந்தால், கட்சியின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துச் சொல்லுங்கள்” எனக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.