Skip to main content

''ஆம்பளையா எனக் கேட்கும் எடப்பாடி எப்படி முதல்வர் ஆனார் என்று மக்களுக்கு தெரியும்'' - உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் பேச்சு

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

People know how you became Chief Minister'' - Udayanidhi Stalin's speech at Erode

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுகவின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 20 ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, "ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெராவை 9000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். நம்மிடம் இருந்து இயற்கை அவரை பிரித்துவிட்டது. தற்போது, மகன் விட்டுச் சென்ற பணியைத் தொடர அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். நான் கருணாநிதியின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். எனவே, இம்முறை ஈவிகேஎஸ் இளங்கோவனை பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க எனக்கு உறுதி அளிக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுகிறார். வாக்கு கேட்கவே விடவில்லை. அந்த விரக்தியில்தான் எதிர்க்கட்சித் தலைவர்; அதிமுக தலைவர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது, ‘ஆம்பளையா இருந்தா; மீசை வச்ச ஆம்பளையா இருந்தா’ என்று பேசியிருக்கிறார்.

 

2016-ல் தலைமை செயலகத்தில் சிபிஐ சோதனை செய்தபோது, அவரது வாய்க்கு ஜிப்பாக அவரது மீசை மாறியது. கொடநாடு என்ற பேரைக் கேட்டாலே அவரது காதுகளை மூடிக்கொள்கிறது அவரது மீசை. தூத்துக்குடியில் அப்பாவிகள் 13 பேரின் கழுத்தை நெரிக்க கயிறாக இருந்தது. இரு பெண்களின் கால் செருப்புக்கு பாலீஷ் போடும் பிரஸ்ஸாக அவரது மீசை இருந்தது. எந்தப் பயனும் இல்லாத அந்த மீசையைத்தான் தமிழக மக்கள் மழுங்கடித்தனர். நான்கு, ஐந்து நாட்கள் ஷேவ் செய்யவில்லை என்றால் எல்லாருக்கும் மீசை வரும். பெரியார் மண்ணில் நின்று கொண்டு, ஆம்பளையா எனக் கேட்கும் பழனிசாமி, மக்களால் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டாரா? ஆனால், எனது தந்தை மு.க.ஸ்டாலின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர். எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார் எனப் பாருங்கள்" என்று பேசிய உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் பாம்பு போல் ஊர்ந்து நெளிந்து கும்பிட்ட படத்தைக் காட்டினார். பிறகு உதயநிதி பேசும்போது, "இப்படிப்பட்டவர்தான் மீசை வச்ச ஆம்பளையா என்று கேட்கிறார். ஆட்சியில் இருந்தபோதும், இப்போதும் மோடிக்கு மட்டுமல்லாது ஆளுநருக்கும் அடிமையாகவும் செயல்பட்டு வருகிறார். பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என யாருக்கும் அவர் உண்மையாக இருந்தது இல்லை.

 

கட்சி பிரச்சனைக்காக மோடியிடம் செல்லும் இருவரும், மக்கள் பிரச்சனைக்காகப் போவதில்லை. ஆட்சியில் இருக்கும் வரை ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஒன்றுபட்டு இருந்தனர். ஆட்சி போன அடுத்த நிமிடம் இருவரும் வீதியில் வந்து சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றனர். சட்டசபையில் நான் பேசும்போது, ‘தவறுதலாக என் காரில் ஏறினால் பரவாயில்லை. அதில், கமலாலயம் போய் விடாதீர்கள்’ என்று சொன்னேன். அதற்கு ஈபிஎஸ் பதில் அளிக்கவில்லை. ஆனால், ஓபிஎஸ் எங்கள் கார் கமலாலயம் போகாது என்று சொன்னார். இப்போது இருவரும் போட்டிப் போட்டு கமலாலயம் போகின்றனர். இதையெல்லாம் நீங்கள் உணர வேண்டும்.

 

மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்தான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்று உங்கள் தலைவர் எம்ஜிஆர் அதிமுக கட்சி விதிகளில் சட்டதிட்டம் தீட்டினார். ஆனால், அதை முறியடித்து தற்போது குறுக்கு வழியில் இந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைவராகியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்க அடிக்கடி செல்லும் கொடநாடு எஸ்டேட்டில் 3 கொலைகள், கொள்ளைகள் நடந்துள்ளன. கூவத்தூரில் உங்களை முதல்வராக்கிய சசிகலாவையும் கவிழ்த்து விட்டு விட்டீர்கள். உங்கள் கூடவே இருந்த ஓபிஎஸ்ஸையும் கவிழ்த்து விட்டு விட்டீர்கள். மக்களுக்கும் உண்மையாக இல்லை. டெல்லி எஜமானர்களான மோடி, அமித்ஷாவுக்கு மட்டும் உண்மையாக உள்ளீர்கள். திமுக ஆட்சி அமைந்து இரு ஆண்டுகளில் சென்னையில் ரூபாய் 240 கோடியில் கிங்ஸ் மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம் ஆறு மாதங்களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.

 

2019-ல் பிரதமர் மோடி மதுரைக்கு வந்து ரூபாய் 3000 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவித்தனர். அதற்காக 300 கோடி செலவு செய்தார்கள். ஆனால் பாருங்கள் இதுதான் அதிமுகவும், பாஜகவும் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை" என்று அதே செங்கலை காட்டினார் உதயநிதி. மீண்டும் அவர், "20 மாத திமுக ஆட்சியில் கொரோனா இரண்டாவது அலையின்போது 2.14 லட்சம் குடும்பங்களுக்கு தலா 4 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்பட்டது. அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் இதுவரை 222 கோடி பயணம் பெண்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரோட்டில் மட்டும் இதுவரை 11 கோடி பயணம் மேற்கொண்டுள்ளார்கள். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், பொங்கல் பரிசு தொகுப்பு, 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, மக்களைத் தேடி மருத்துவம், காலை சிற்றுண்டி, இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை ரூபாய் 62 கோடியில் கனி மார்க்கெட் ஜவுளி மையம், 45 கோடியில் சக்தி சாலை பேருந்து நிலைய மேம்பாட்டு பணி, 41 கோடியில் 6 ஸ்மார்ட் சாலைப்பணி, 39 கோடியில் ஆர்கேவி சாலை தினசரி மார்க்கெட் மேம்பாட்டுப் பணி, 27 கோடியில் வணிகவளாகம், 20 கோடியில் 38 சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு 1000 கோடியில் இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இவையெல்லாம் நடப்பதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவனை பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்