‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்கிற நிகழ்சியின் மூலமாக மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்குடியில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், “வரம் கொடுத்தவர் தலையில் கை வைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவிற்கு துரோகம் செய்தவர், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது எனக் கூறி நான்கு வருடம் ஆகிவிட்டது. தெருவிற்குத் தெரு ஜெயலலிதா படத்தை வைத்து வாக்கு சேகரிக்கிற எடப்பாடி பழனிசாமி, ஏன் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஏனென்றால் கலக்சன், கரப்ஷன், கமிஷன் அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87 அதில் தமிழகத்திற்கு ரூ.30 வரி கட்ட வேண்டும். கேஸ் விலை ரூ.760 அதில வரி, சாந்து பொட்டு, செருப்பு, மாஸ்க் உள்ளிட்ட அனைத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி. நீங்க எதையாவது கொண்டுவாங்க. ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தளவு விவசாயி அதிகமாக சம்பாதிக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு குறைவாக கொடுக்கக் கூடாது. விவசாயி நஷ்டத்தில போகக்கூடாது. கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால், தமிழக அரசு நிறைவேற்றவில்லை ஏனென்றால் எடப்பாடி பழனிசாமிக்கு பதவி போய்விடுமோ என பயம்.
ஸ்டாலின் மட்டுமே விவசாயிகளைக் காப்பார். மோடி கொண்டு வந்த சட்டத்திற்கு எடப்படி பழனிசாமிதான் ஆதரவு கொடுத்தார். இப்படியே தொடர்ந்து நமது உரிமையை பறிக்கொடுத்தால், நீங்க குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும். இந்த நிலையை மாற்ற வேண்டும் என பெரியார், அண்ணா போராடிய மண் இது. அ.தி.மு.க.வினருக்கு காசு கொடுத்து ஓட்டு வாங்கத்தான் தெரியும். இந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். நான் இந்த மண்ணுக்காரன்; எங்க அம்மா கும்பகோணம், எங்க அப்பா திருவாரூர், எங்க தாத்தா பிறந்ததும் திருவாரூர் என இந்த மண்ணுக்குச் சொந்தகாரன். உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது" என பேசினார்.