Skip to main content

“தமிழர்களுக்கு எதிரான விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 17/09/2024 | Edited on 17/09/2024
Ramadoss insists on Centre should withdraw anti-Tamil rules for Indian Embassies jobs

தமிழர்களுக்கு எதிரான விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில், தேவைப்படும் காலங்களில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தமிழாசிரியர்களாக பணியாற்ற தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு விளம்பரத்தை வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பண்பாட்டு உறவுகளுக்கானக் குழு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டமும், கல்வியலில் இளநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான இந்த நிபந்தனைகள் கண்டிக்கத்தக்கவை.

வெளிநாடுகளில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைப்புகளில் தமிழ் மொழி படிக்க விரும்புபவர்களில் பலர் தமிழ் தெரியாதவர்களாக இருப்பார்கள் என்பதால் தமிழாசிரியர்களுக்கு பிறமொழி அறிவு அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காகத் தான் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகுதி பெற்றிருந்தால், ஆங்கிலத்தின் வழியாக யாருக்கு வேண்டுமானாலும் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்க முடியும். தமிழ் மொழியை கற்றுக் கொடுப்பதற்கு அதற்கு சற்றும் தொடர்பில்லாத இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு ஏன் தேவை? என்பது புரியவில்லை.

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றுவதற்கான தமிழாசிரியர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? என்பது குறித்த வெளிப்படையான நடைமுறைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஆள்தேர்வைப் பொறுத்தவரை இந்தியப் பண்பாட்டு உறவுகளுக்கானக் குழுவின் அதிகாரிகள் வைத்தது தான் சட்டம் ஆகும். அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதற்காகவே இந்தத் தேவையற்ற நிபந்தனைகளை திணித்திருப்பார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது. 

இந்தி ஆசிரியர் பணிக்கோ, சமஸ்கிருத ஆசிரியர் பணிக்கோ தமிழ் மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்படாத நிலையில், தமிழாசிரியர் பணிக்கு மட்டும் இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அப்பட்டமான இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு ஆகும். இதை அனுமதிக்க முடியாது. எனவே, தமிழாசிரியர் நியமனம் தொடர்பான விளம்பர அறிவிப்பில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை இந்திய வெளியுறவுத்துறை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்