நீலகிரி மாவட்ட ரஜினிகாந்த் மன்றத்தினரின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், ரசிகர்களுடன் ரஜினிகாந்த் காணொளி காட்சியின் மூலம் பேசினார்.
ரஜினிகாந்த் தனது பேச்சில், ‘’நீலகிரி மாவட்ட ரசிகர்களூக்கு என் அன்பான வணக்கங்கள். நீங்கள் இங்கு வந்ததற்கு ரொம்ப சந்தோசம். மனமார்ந்த நன்றி. நீங்கள் இங்கு கூடியதற்கான காரணத்தை சுகாரனும், ராஜூவும் விளக்கி கூறுவார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதுதான் நமது நோக்கம். இது ரொம்ப கஷ்டமான வேலை. ஆனால், நாம் ஒற்றுமையுடன், ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நம் இதயத்தை.,.. எண்ணங்களை நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இது பொதுநலம்...சுயநலம் கிடையாது. இது பொதுநலத்தை நோக்கி சென்று அரசியல் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். மற்ற மாநிலங்கள் நம் மாநிலத்தை பார்த்தை ஆச்சரியப்பட வேண்டும். அந்த அளவிற்கு நாம் சாதித்து காட்டவேண்டும். இது நமக்கு ஆண்டவன் கொடுத்திருக்கின்ற ஒரு வாய்ப்பு. இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
குடும்பம், தாய்-தந்தையை கவனிக்காமல் நீங்கள் இந்த பணியில் ஈடுபவதில் எனக்கு இஷ்டமில்லை. முதலில் வீடு. அதை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகுதான் நாடு. வீட்டை கவனிக்காமல் நாட்டு வேலைக்குக் வாருங்கள் என்று சொல்லமாட்டேன். அப்படி வந்தாலும் சத்தியமாக எனக்கு பிடிக்காது.
தலைமை எல்லாவற்றையும் பார்த்துதான் ஒரு முடிவு எடுக்கும். அப்படி இருக்கும்போது சிலருக்கு பதவிகள் கிடைக்காமல் போனால் அதற்காக வருத்தப்படக்கூடாது. நமக்குள் சண்டை வராதா, மனஸ்தாபம் வருகிறதா என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. முழு ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஒழுக்கம் - ஒற்றுமை - கட்டுப்பாடு என்று மூன்றை மட்டும் காட்டுங்கள். மற்றபடி ஆண்டவன் இருக்கிறான்...நான் இருக்கிறேன்...நீங்கள் இருக்கிறீர்கள்... ஒரு மாற்றத்தை உண்டாக்குவோம்.’’என்று குறிப்பிட்டார்.