நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அதே சமயம், அ.தி.மு.க கட்சியில் கூட்டணி அமைப்பதில் தாமதம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (21-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “அதிமுக சின்னத்தை முடக்குமாறு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். 2019ல் நான் முதலமைச்சராக இருந்த போது தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தான் கூட்டணி அமைக்கப்பட்டது. அதனால், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. பிரதமர் வேட்பாளரை முன் நிறுத்திதான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தமிழக மக்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள். அதனால், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தான் நாங்கள் பார்க்கிறோம். ஆனால், தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைந்தால் கூட்டணி தர்மத்தை பார்க்க வேண்டியுள்ளது. அதனால், தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. அதனால், மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, அதிமுகவின் குரல் நாடாளுமன்றத்தில் நிச்சயம் ஒலிக்கும். கூவத்தூர் விவகாரம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த முன்னாள் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.