அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் (80), உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (05.08.2021) காலமானார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட மதுசூதனன், சிகிச்சைக்குப் பின் தேறியிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக கட்சி வேலைகளில் இருந்து ஓய்வுபெற்று தண்டையார்பேட்டையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சேர்க்கப்பட்டிருந்த மதுசூதனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று அவர் காலமானார். அவரது மறைவு அதிமுகவிற்குப் பெரும் இழப்பு என அதிமுகவினர் உட்பட அனைத்து தரப்பிலிருந்தும் இரங்கல்கள் வெளியிடப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, “அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ. மதுசூதனன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (நேற்று) பிற்பகலில் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
அதிமுகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான மதுசூதனன், கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். அதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆரில் தொடங்கி இப்போதைய தலைவர்களாக ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி வரை அனைவரின் நம்பிக்கையையும் பெற்றிருந்தவர். அவரது மறைவு அதிமுகவுக்கும், அதன் தொண்டர்களுக்கும் பெரும் இழப்பாகும்.
மதுசூதனன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அதிமுக தலைமை, தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.