காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை இன்று ராகுல் துவங்கியுள்ளார்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் குறித்து பேசுகையில், ''கிட்டத்தட்ட இறந்து போன கட்சி காங்கிரஸ் கட்சி. அதற்கு இவருடைய நடைப்பயணம் உயிரோட்டம் கொடுக்குமா என்கின்ற முயற்சியை அவர்கள் செய்து பார்க்கிறார்கள். குறிப்பாக கடந்த சில மாதங்களிலேயே கூட காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய மிக முக்கிய தலைவர்கள் அவர்கள் வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் சரி, இளையவர்களாக இருந்தாலும் சரி நாடு முழுவதும் அவர்கள் தேசிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு பிரதமர் மோடியின் செயல்பாட்டின் காரணமாக எங்களிடம் வந்து கொண்டிருக்கக் கூடிய சூழலில், ராகுல் காந்தி அவருடைய கட்சியை எப்படியாவது பலப்படுத்த முடியுமா என்ற பல பயிற்சியில் இறங்கி இருக்கிறார்.
நிச்சயமாக காங்கிரஸ் மூழ்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கப்பல். அதில் அவர் நடந்தாலும், சரி ஓடினாலும் சரி, இல்லை மாரத்தான் பண்ணினாலும் சரி ஒருபோதும் இது வேலைக்கு ஆகாது. ஒரு காலத்தில் நாடு முழுவதும் இருந்த காங்கிரஸ் கட்சி தங்களுடைய ஒரு குடும்ப ஆதிகத்தின் காரணமாக, தொடர்ச்சியான ஊழல் புகாரின் காரணமாக, நிர்வாகத் திறமையின்மையின் காரணமாகவும் அவர்களே அவர்களை புதைத்துக் கொண்ட பிறகு, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது என்பதைப் போல ராகுல் காந்தியின் இந்த பயணம் உள்ளது. இந்த பயணம் அவரது உடல் நலத்திற்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாமே தவிர நாட்டிற்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ நல்லதாக இருக்கப் போவதில்லை'' என்றார்.