இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் இந்தி மொழியில் செயல்பட்டு வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி மொழியில் மாற்றப்பட்ட விவகாரத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘எல்ஐசி இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது!
இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, வலுக்கட்டாயமாக கலாச்சார மற்றும் மொழியை திணிக்கும் செயல். எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. எந்த தையரித்தில் பெரும்பான்மை இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்க முடிகிறது?. இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.