Skip to main content

தைலாபுரத்து தடபுடல் விருந்து ! திமுக நடத்திய பேச்சுவார்த்தைகளை சொல்லி கலகலப்பாக்கிய பாமகவினர்!

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

 


அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மறைவு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களை அப்-செட்டாக்கியிருந்தாலும் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கொடுத்த விருந்து அதிமுக தலைவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது. 

 

t

 

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் முதல் தொண்டர்கள் வரை உற்சாகமடைந்தனர். இதே உற்சாகம் பாமகவிலும் எதிரொலிக்கவே செய்தன ! இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக தலைவர்களுக்கு விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் ராமதாஸ். பாமகவுடனான கூட்டணியை விரும்பியவர்களும் எதிர்த்தவர்களும் என அனைத்து அமைச்சர்களும் அந்த விருந்தில் கலந்துகொண்டு ராமதாஸை சந்தோசப்படுத்தியுள்ளனர்.

 

t

 

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனுக்குப் பிறகு , தைலாபுர தோட்டத்துக்குள் சென்ற  அரசியல் தலைவர்கள் என்ற பெயர் எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினருக்கு கிடைத்துள்ளது என்கிறார்கள் பாமகவினர். 

 

இது குறித்து பாமக தரப்பில் விசாரித்த போது, " தைலாபுரத்துக்கு அதிமுக தலைவர்களை அழைத்து பெருமைப்படுத்த வேண்டும் என விரும்பினார் டாக்டர் ராமதாஸ். நட்சத்திர ஹோட்டலில் அதிமுக கூட்டணி  ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு தனது மகள் வீட்டுக்குத் திரும்பியிருந்த ராமதாஸ், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணி தலைவர்  அன்புமணி உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம், 'தோட்டத்துக்கு அழைத்து அதிமுக தலைவர்களுக்கு ஒரு விருந்து கொடுக்கலாம் என நினைக்கிறேன். உங்கள் விருப்பம் எப்படி ?' என கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், 'அதிமுக - பாமக நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் நெருக்கம் உருவாக இந்த விருந்து பயன்படும் ' என சொன்னார்கள். இதனையடுத்து, எடப்பாடியிடமும் ஓபிஎஸ்சிடமும் பேசிய ராமதாஸ், விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு மகிழ்ந்த அவர்கள், தைலாபுரம் வருவதற்கு சம்மதித்தனர். இதனையடுத்து விருந்துக்கான ஏற்பாடுகளில் அக்கறைக் காட்டினார் ராமதாஸ் " என விவரித்தனர். 

 

c

 

பாமக கூட்டணியை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஒப்பந்தம் போடப்பட்ட நிகழ்வை புறக்கணித்திருந்தார். அதனால், சி.வி.சண்முகத்தை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு அழைத்தனர் ராமதாசும், அன்புமணியும். அதே போல, எடப்பாடியும் சி.வி.சண்முகத்தை அழுத்தம் கொடுத்து அழைக்க, விருந்துக்கு வருவதாக சம்மதித்தார் சி.வி.சண்முகம். 

 

மதிய விருந்துக்குத்தான் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மதுரைக்கு வந்திருந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஓபிஎஸ்சை மதுரைக்கு வருமாறு அழைத்திருந்தார். அதன்பேரில், ஓபிஎஸ்சும், அமைச்சர் தங்கமணியும் மதுரைக்கு விரைந்தனர். இதனால், தைலாபுரத் தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்து, இரவு நேர விருந்தாக மாற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என பெரும்பாலான அதிமுக பெருந்தலைவர்கள் அனைவரும் ஆஜராகியிருந்தனர். 


தோட்டத்துக்கு வந்திருந்த அனைவரையும் டாக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாசும், ராமதாஸ் குடும்பத்தினரும் வரவேற்றனர். தனது குடும்பத்தினரை எடப்பாடிக்கும் அமைச்சர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார் ராமதாஸ். ! 

 

t

 

ராமதாஸ் மீதிருந்த வருத்தத்தையும் கோபத்தையும் புறம்தள்ளி வைத்து விட்டு மகிழ்ச்சியுடன் விருந்தில் கலந்துகொண்டார் சி.வி.சண்முகம். அவருக்கு சிறப்பான வரவேற்பு தந்தார் டாக்டர் அன்புமணி. விருந்து துவங்குவதற்கு முன்பு, " அதிமுக -பாமக கூட்டணி உருவானதை ஸ்டாலினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை " என ராமதாஸிடம் எடப்பாடி சொல்ல, அதனை ஆமோதித்துள்ளார் ராமதாஸ். அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ், " இந்த கூட்டணியை திமுக எதிர்பார்க்கவில்லை. அந்த ஆதங்கம் தான் உங்களையும் அன்புமணியையும் ஸ்டாலின் திட்டுகிறார். 

 

தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் எப்படி வேணாலும் அமையும்ங்கிறது ஏன் அவருக்கு தெரியவில்லை? காங்கிரஸ் கட்சியை 'கூடா நட்பு கேடாய் முடியும்' என சொல்லி காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாதுன்னு சொன்னார் கலைஞர். போன தேர்தல்ல அக்கட்சியுடன் கூட்டணி வைக்கலையா? இப்போதும் காங்கிரசுடன்தானே உறவாடுகிறார்கள் ? " என சொல்ல, திமுக தரப்பினர் தங்களுடன் எப்படியெல்லாம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்பதை பாமக தலைவர்கள் பகிர்ந்துகொள்ள, அந்த இடமே கலகலப்பானது. இதனையடுத்து, விருந்து ஆரம்பமானது. 

 

சைவமும் அசைவமும் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மட்டன், சிக்கன், மீன் வகைகள் என பல்வேறு சுவைகளில் விருந்து களை கட்டியது. அதிமுகவினர் அனைவரையும் அக்கறையுடன் கவனித்தார் அன்புமணி. ரசித்து சுவைத்து மகிழ்ந்தனர் அதிமுகவினர். அதிமுக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் கடந்த காலங்களில் பாமக வைத்த குற்றச்சாட்டுகளை மறக்கடித்தது தைலாபுரத்து தடபுடல் விருந்து !


 

சார்ந்த செய்திகள்