வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இறுதிகட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் உள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., வி.சி.க., முஸ்லீம் லீக், கொ.ம.தே.க. மற்றும் ஐ.ஜே.கே. என கூட்டணி இறுதி வடிவம் பெற்று தொகுதி எண்ணிக்கைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு கூட்டணியான அதிமுகவில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம் என கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதில்மேல் பூனையாக உள்ள தேமுதிக எந்த அணியில் இணையப்போகிறது என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேச்சாக இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, கூட்டணி பற்றி முடிவெடுப்பதற்காக நாளை (05.03.2019), கோயம்பேட்டிலுள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் அணி செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கட்சித் தலைவரான விஜயகாந்த் கலந்துகொள்ள உள்ளார். அக்கூட்டம் முடிந்த பிறகு, தேமுதிக எந்த கூட்டணியோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போகிறது என்பதை விஜயகாந்த் அறிவிக்கிறார்.
இதுபற்றி மாநில நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசியபோது, இந்தக் கட்சிக் கூட்டமே தேர்தல் கூட்டணி அறிவிப்புக்காகத்தான். ஏற்கனவே, திமுக மற்றும் அதிமுகவோடு ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் திமுக குறைவான இடங்களையும், அதிமுக கூடுதலான இடங்களையும் கொடுக்க முன்வந்துள்ளார்கள். ஆகவே நாம் அதிக இடங்கள் கொடுக்கும் கட்சியோடு கூட்டணி வைப்போம். அப்படி பார்த்தால் நாம் அதிமுகவோடு கூட்டணியில் செல்வதுதானே சரியாக இருக்கும் இவதான் அங்கு பேசப்படவுள்ளன. கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் கட்சி நிர்வாகிகளை இந்த முடிவிற்கு ஏற்றுக்கொள்ள வைக்கும் திட்டமும் நடைபெறவுள்ளது. ஆக, அதிமுகவோடு, தேமுதிக தேர்தல் கூட்டணி பேசப்போகிறது என்பதை கட்சி கூட்டத்தைப் போட்டு அறிவிக்க இருப்பதற்குதான் இந்தக் கூட்டம்.
மேலும் சில மாவட்ட செயலாளர்கள் இப்படி கூறுகிறார்கள்... எங்கள் கட்சியில் எல்லாமே ரகசியம்தான். அந்த ரகசியத்தை அறிந்தவர்கள் மூன்று பேர்தான். ஒன்று கேப்டன், மற்றொன்று அவர் மனைவி பிரேமலதா, இன்னொருவர் அவரது மைத்துனரான சுதீஸ், இவர்கள்தான். இவர்கள் எங்கு என்ன பேசவேண்டுமோ எல்லாவற்றையும் பேசிவிட்டு, எல்லாவித பரிமாற்றங்களையும் முடித்துவிட்டு, ஒரு அறிவிப்பு செய்வதற்காக, சம்பிரதாயமாக இந்தக் கூட்டத்தைப் போடுகிறார்கள். இதற்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான கட்சி நிர்வாகிகள் 5000, 10000 செலவுசெய்து சென்னைக்கு வரவேண்டியுள்ளது. இதுகூட எங்களுக்குத்தான் செலவு. என வேதனையோடு கூறினார்கள்.