நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 14-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் அதிகபட்சம் 18 நாட்கள் நடக்கும். கடந்த 1 வருடமாக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் துணை சபாநாயகர் பதவி காலியாகவே இருக்கும் நிலையில் அதற்கான தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை எழுப்பியபடி இருந்தன.
இந்த நிலையில், ராஜ்யசபா துணை சபாநாயகருக்கான தேர்தலை நடத்த முடிவு செய்து அறிவித்தது மத்திய அரசு. அதனால் கூட்டத்தொடரின் முதல்நாள் இதற்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்படுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக கூட்டணியின் சார்பாக முன்னாள் துணை சபாநாயக பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஹரிவன்ஷ் நாராயண்சிங்கை மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறார் பிரதமர் மோடி. இவரை எதிர்த்து, எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த விரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திமுகவின் திருச்சி சிவாவை நிறுத்தும் யோசனையை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களிடம் பேசினர். திருணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பாணர்ஜியிடம் சோனியாவே பேசினார். ஆனால் காங்கிரஸ் எடுத்த அத்தகைய முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், திருச்சி சிவாவுக்கு பதிலாக, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் ஜாவை நிறுத்த காங்கிரஸ் முயற்சி எடுத்துள்ளது. பாஜக சார்பில் நிறுத்தப்படும் ஹரிவன்ஷ் நாராயண் பீகார்காரர் என்பதால், அதே பீகாரை சேர்ந்த மனோஜ்ஜாவை நிறுத்தினால் போட்டி அதிகரிக்கும் என கணக்குப் போட்டுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால், காங்கிரஸ் எடுக்கும் இந்த முயற்சிக்கும் இன்று காலை வரை எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை.
இதனால், பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர் என்கிற காங்கிரசின் கான்செப்ட் முழு வடிவம் பெறுமா, பெறாதா என்கிற கேள்வியால் ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், பாஜக எம்.பி.க்கள் அனைவரும் முதல்நாள் அவசியம் சபையில் இருக்க வேண்டும் என அக்கட்சியின் கொறடா பாஜக எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
ராஜ்யசபாவுக்கான துணை தலைவர் தேர்தல் பரபரப்பு இப்படி இருக்கும் நிலையில், லோக்சபாவுக்கான துணை தலைவர் தேர்தலை எப்போது நடத்துவீர்கள் என்கிற கேள்வியும் டெல்லியில் எதிரொலிக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லோக்சபா தலைவர் ஓம்பிர்லா, “கொரோனா நெருக்கடியில் கூட்டத்தொடரை நடத்துவதே பெரிய சவாலான விஷயம். அதேசமயம், லோக்சபாவுக்கான துணை சபாநாயகரை தேர்வு செய்வதில் அரசுதான் முடிவு செய்யும்” என்கிறார்.