கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்திருந்தது. மேலும் அவர்களை 10 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவுக்கு மாற்றியது. அதாவது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலாக அவர்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு (இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது. மேலும் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு இனி ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கும் கூடுதலாக தலா 2 சதவீதம் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் பசவராஜ் பொம்மை அரசு அறிவித்திருந்தது.
இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு 2 பழங்குடியின சமூகத்தினருக்கு தலா 2% உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா சமூகத்தினர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உள் ஒதுக்கீடு தொடர்பாக, ஏ.ஜே.சதாசிவ குழுவின் அறிக்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் மாநில அரசின் முடிவை எதிர்த்து போராட்டம் செய்த பஞ்சாரா சமூகத்தினர், இட ஒதுக்கீட்டிற்காக பல நாட்களாக போராடி வருவதாகவும் எங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அப்போது கூறி இருந்தனர். அதனைத் தொடர்ந்து எடியூரப்பாவின் வீட்டின் மீது பறந்த பாஜக கொடியை அகற்றி எரிந்த போராட்டக்காரர்கள் பஞ்சாரா சமூகத்தின் கொடியை ஏற்றினர்.
மேலும் எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்த வேண்டிய சூழலும் அப்போது ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோரது உருவப்படங்களை எரித்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலும் வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதேசமயம், இஸ்லாமியர்களுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், அந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (25.04.2023) விசாரணைக்கு வந்தபோது, “மே 9 ஆம் தேதி வரை கர்நாடக அரசின் இட ஒதுக்கீட்டு ரத்து முடிவை அமல்படுத்தக்கூடாது. மேலும் மே 9-ம் தேதி வரை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (26.04.2023) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள காக்வாடியில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், "காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இந்து, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று மதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்து வருகிறது. இது போன்ற அரசியல் நாட்டில் இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களைச் சமாதானப்படுத்த 4% இட ஒதுக்கீடு வழங்கினார்கள். ஆனால் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது சட்டத்திற்குப் புறம்பானது.
இந்திய வரலாற்றில் அரசியல் கட்சிகள் தர்மத்தின் ஆதரவுடன் தேர்தலைச் சந்திப்பார்கள். ஆனால் மதத்தைப் பயன்படுத்துவது காங்கிரஸ் கட்சி மட்டுமே. பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவித்தால் அதை நாங்கள் வரவேற்போம். ஆனால் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே, கர்நாடக மக்கள் பாஜகவுக்குத் தேர்தலில் பெரும்பான்மையை வழங்க வேண்டும்" என பேசினார்.