நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பெருமாப்பட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியைச் சுற்றியுள்ள 52 மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு ஆண்டுகளாக ஓர் ஆசிரியர் மட்டுமே பணியில் இருந்து வருகிறார். இவர் ஒருவரே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். இந்நிலையில் இந்த ஆசிரியரும் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இதன் காரணமாக பள்ளியில் நிரந்தர ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாற்று ஏற்பாடாக கல்வித்துறை சார்பில் தினசரி ஒரு ஆசிரியர் என்ற வகையில் பள்ளிக்கு மாற்றுப்பணியில் ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் அங்குக் கல்வி பயிலும் மாணவ - மாணவிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வகுப்புகளை புறக்கணித்து மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்வித்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.