"சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா, தண்டனை காலம் முடிந்து விரைவில் விடுதலையாக போகிறார், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படபோகிறது," என்கிற பேச்சு சமீப நாட்களாகவே ரெக்கை கட்டி பறக்கிறது.
அதிமுகவினரும், அமமுகவினரும் கூட இது குறித்து பேசியபடியே இருக்கின்றனர். இந்த சூழலில் அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளரும், திவாகரனால் உறுவாக்கப்பட்டவருமான அமைச்சர் காமராஜ், சில நாட்களுக்கு முன்பு திவாகரனோடு நீண்ட நேரம் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. அது உண்மை என்பது போலவே திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த், தனது முகநூலில் திவாகரனும், அமைச்சர் காமராஜும் ஒன்றாக இருக்கும் பழைய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதற்கு திவாகரனின் ஆதரவாளர்களும், அதிமுகவினரும் கூட மீண்டும் திவாகரன் வந்துவிட்டார் என்று பேசினர்.
ஆனால் சசிகலா தான் வெளியில் வரும்போது மிகப்பெரிய மாற்றம் இருக்க வேண்டும் என்றும், அதிகாரம் இருக்கவேண்டும் என்றும் நினைப்பதாகவும், 'தற்போது ஒட்டுமொத்த கவனமும் கரோனா பாதிப்பு மீது இருப்பதால் வெளியே வந்தால் எதுவும் நிகழ்ந்து விடாது, எந்த மாற்றமும் இருக்காது, எதுவும் நடக்காமல் போகவா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தேன்?' என்பதுபோல் தனது உறவினர்களிடம் ஆத்திரபட்டிருக்கிறார். அதனால் தற்போது உள்ள கரோனா காலத்தில் அவர் வெளியில் வர வாய்பிருக்காது, அதுதான் எதார்த்தமான உண்மையும், என்கிறார்கள் மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலா ஆதரவாளர்கள்.
இந்த நிலையில் தஞ்சாவூர் வந்திருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம், 'சசிகலா சிறையில் இருந்து வெளியில் வருவதாக தகவல் வருகிறது, அரசியல் மாற்றம் இருக்குமா?' என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நடக்காத ஒரு செய்திக்காக நான் பதில் கூற வேண்டியதில்லை, இருந்தாலும் கூறுகிறேன். அதிமுகவின் மாவட்ட செயலாளராக இருப்பதால் பொதுக்குழு, செயற்குழுக்களில் எல்லாம் அங்கம் வகிப்பவன் என்கிற முறையில் நான் தெளிவாக கூறுகிறேன். பொதுக்குழு, செயற்குழு எடுத்த முடிவின் அடிப்படையில் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்துகிறார்கள், அதில் எந்த மாற்றமும் நிகழாது. சசிகலா வெளியே வரும் தகவல் கூட வதந்திதான், அப்படியே வெளியில் வந்தாலும் கூட எப்படி ஆட்சி மாற்றம் ஏற்படும், யார் யாரோ எத்தனையோ முயற்சி எடுத்துட்டாங்க! இந்த ஆட்சியை கலைக்க யாராலும் முடியவில்லை! ஒருபோதும் சசிகலாவாலும் முடியாது," என்கிறார்.