விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவிற்கு வாழ்த்துகள். நேரு குடும்பத்திற்கு அப்பாற்பட்ட ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதில் அக்கட்சியின் மீதான நம்பத்தன்மையை உயர்த்தியிருக்கிறது. சனாதனத்தை எதிர்க்கக்கூடிய முன்னணி தலைவர்களில் ஒருவராக மல்லிகார்ஜூன கார்கே செயல்பட்டு வருகிறார். பாஜகவுக்கு எதிரான அரசியல் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்குரிய பணிகளை மல்லிகார்ஜூன கார்கே வெற்றிகரமாக முன்னெடுப்பார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நம்புகிறது. முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எக்காரணத்தை கொண்டும் இந்திய அரசியல் களத்தில் மூன்றாவது அணி ஏற்பட்டு விடக்கூடாது என்பதை தடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.
ஆட்சிக்கு வந்தால் ரூபாயின் மதிப்பை உயர்த்துவோம் என மோடி கூறினார். ஆனால் அமெரிக்க டாலரின் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83 என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும். நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்த வேண்டும் என்று எண்ணாமல் மதவெறியை தூண்டுவதும், வெறுப்பு அரசியலை விதைப்பதும் போன்ற நடவடிக்கையில் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்திய கடற்படையை சேர்ந்தவர்களே தமிழ்நாட்டின் மீன்பிடி படகு என கண்டறிந்த பிறகும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.