சேலம் டூ சென்னை எட்டுவழிச்சாலை அமைவதை கண்டித்து ஜீலை 17ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை வந்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,
இந்த எட்டுவழிச்சாலையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, காடுகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான விலங்குகள், பறவையினங்கள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் அழியும் அபாயம் உள்ளது. சாலை மேம்பாடு தேவை தான். ஆனால் சேலம் டூ சென்னை இடையிலான தேவை எங்கு வந்தது.
மக்கள் எதிர்க்கிறார்கள் இந்த சாலையை, மக்களின் கருத்துக்கு எதிராக அமையும் இந்த சாலை குறித்து மக்களிடம் தெளிவை ஏற்படுத்தவில்லை அரசாங்கம். பசுமைவழிச்சாலையை ரஜினிகாந்த் ஆதரித்து பேசுவது அதிர்ச்சியளிக்கவில்லை. தொடர்ச்சியாக அவர் ஆளும்கட்சிக்கு சாதகமாக பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் தன்னை வலதுசாரி சிந்தனையாளராக அடையாளம் காட்டிக்கொள்கிறார்.
தமிழகத்தில் ஊழல் பெருகியுள்ளது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசுகிறார். இதற்கு முதல்வரோ, துணை முதல்வரோ எதிர்ப்புக்காட்டவில்லை. இதற்கு பின்னால் சில அரசியல் காரணங்கள் உள்ளதை அறியமுடிகிறது. தமிழக அரசுக்கு நெருக்கடி தர முயல்கிறது மோடி அரசாங்கம். அதற்காக தான் வருமானவரித்துறை ரெய்டு நடக்கிறது. இதன் மூலம் ஆட்சியை கலைப்பதற்கான சாத்தியக்கூறை உருவாக்குகிறார்கள். அல்லது முதல்ராகவுள்ள எடப்பாடியை மாற்றுவார்கள்.
நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம், அந்த கூட்டணி மக்கள் நலத்திடங்களுக்காக போராட்டங்கள் நடத்திவருகின்றன. இந்த கூட்டணியை உடைக்க ஏதோதோ சொல்லி வருகிறது பாமக. உறுதியான இந்த கூட்டணிக்குள் கலகத்தை உருவாக்க முடியாது. வரும் தேர்தலில் 3வது அணி அமைவது தமிழகத்துக்கு நல்லதல்ல என்றார்.