காங்கிரஸின் கோட்டையாக இருந்த ராஜபாளையம் நகராட்சியை, கடந்த தேர்தலில் அதிமுக கைப்பற்றியது. இதுவரையிலும் ஒருமுறைகூட சேர்மன் நாற்காலியில் அமராத திமுக, இந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் மூலம் முனைப்பு காட்டிவருகிறது. ஆனால், அதிமுக தரப்பில் 1-வது வார்டில் போட்டியிடும் ராமராஜுவின் வழிகாட்டலில், அதிமுக சேர்மன் வேட்பாளராக அடையாளப்படுத்தப்படும் 5-வது வார்டில் போட்டியிடும் அவருடைய தங்கை ராஜம், சத்தமில்லாமல் முன்னேறி வருகிறார். திமுக தரப்பிலோ, உள்ளடி குமுறல்கள் வெடித்தபடியே உள்ளன.
மொத்தம் உள்ள 42 வார்டுகளில் 36 வார்டுகளில் போட்டியிடும் திமுக, பாரம்பரிய திமுகவினர் பலரையும் புறந்தள்ளிவிட்டு, கட்சியினருக்கு அறிமுகமே இல்லாத புதுமுகங்களையும், அதிமுகவிலிருந்து வந்தவர்களையும் கணிசமான எண்ணிக்கையில் களம் இறக்கியிருக்கிறது. அதனால், திமுக வேட்பாளர்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் சுயேச்சையாகப் போட்டியிடுவதும், சீட் கிடைக்காத அதிருப்தியில் உள்ளவர்கள் உள்ளடிகளில் இறங்கியிருப்பதும் பளிச்சென்று தெரிகிறது. மதிமுகவுக்கு வாக்கு வங்கியிருந்தும் சீட் ஒதுக்காமல் அம்போவெனவிட்டு, அக்கட்சியினரை அவமரியாதை செய்ததும் நடந்துள்ளது.
திமுக வட்டாரத்தில் “கடந்த அதிமுக ஆட்சியில் ராஜபாளையம் மக்களுக்கு மண்ணெண்ணெய் கிடைக்கவிடாமல் பதுக்கி, கடத்தல் மூலம் கோடிகளைச் சுருட்டிய ஒருவர் திமுகவில் சேர்ந்தவுடனே சீட் பெற்றதும், அதே ரூட்டில் அக்கட்சியிலிருந்து தாவிய மேலும் 15 பேரை போட்டியிட வைத்ததும், கொடுமையாக இருக்கிறது. மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் சாலைப் பணிகளில் அதிகமாக பெர்சன்டேஜ் கேட்டது, நூலகக் கட்டிடத்தில் கமிஷன் பார்த்தது, நகராட்சியிலும் வருவாய் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவது, கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. பத்தாயிரத்துக்கு விலைபோய் கட்சிக்கு துரோகம் செய்தவர் மனைவிக்கு சீட் கிடைத்திருக்கிறது. கட்சியின் சீனியர் ஒருவருக்கு, சீட்டுக்காக அமைச்சர் சிபாரிசு செய்தார். அது கண்டுகொள்ளப்படாத நிலையில் ‘மேலிடத்தில் உறவு வைத்துக்கொண்டு எனக்கே படம் காட்டுகிறாயா? இந்த தேர்தலோடு நீ தொலைந்தாய்..’ என அமைச்சர் கறுவியதும் நடந்திருக்கிறது. நடப்பதெல்லாம் குளறுபடிகளாக இருப்பதால், ‘நானே திமுக சேர்மன்’ என பவித்ரா, சுமதி, கீதா என வரிசைகட்டி கூவினாலும், திமுக சேர்மன் வேட்பாளர் என்று அடையாளப்படுத்தப்படுவது பவித்ரா ஷ்யாம்தான்.” என்று நிலவரத்தை விவரித்தனர்.
குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட நிலையில், ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனை தொடர்புகொண்டபோது “நான் மீட்டிங்கில் பிசியாக இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்.” என்றவர், தொடர்ந்து நம்மைத் தவிர்த்தார்.
இந்நகராட்சியில் திமுகவும் அதிமுகவும் ஓட்டுக்கு ரூ.500 வீதம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்திருக்கிறது. அதேநேரத்தில், பணபலம் இல்லாத அதிமுக வேட்பாளர்கள், “கையெடுத்துக் கும்பிட்டோமே, வாக்குகள் விழாமலா போய்விடும்?” என்று புலம்பவும் செய்கின்றனர். ஆக, வாக்கு வங்கி இருந்தும், ‘வைட்டமின் ப’ பற்றாக்குறையால், கடைசி நேரத்தில் பின்தங்கிவிட்டது அதிமுக.
பட்டியலின வாக்கு வங்கி கணிசமாக இருந்தும், சுழற்சி முறையில் ராஜபாளையம் நகராட்சி சேர்மன் பதவி, நெடுங்காலமாக தங்களுக்கு ஒதுக்கப்படாமலே இருப்பதன் பின்னணியில் ‘சாதி ஆதிக்கம்’ இருந்துவருவதாக, அம்மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.