சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனையில் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், கட்சி தொடங்குவது தொடர்பாகவும், கட்சியின் கொடி, பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை விரைவுப்படுத்துவது குறித்தும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வரும் ஏப்ரல் மாதத்தில் புதிய கட்சியை தொடங்குவார் என்றும் மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் மாநாடு நடத்தி கட்சி பெயரை அறிவிக்க வாய்ப்பு இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
மேலும் ரஜினி கட்சி ஆரம்பித்துவிட்டால் கட்சியை மக்களிடையே பிரபலப் படுத்துவதற்கு ஒரு தனி சேனலை துவங்குவார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதோடு கோவையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் இதுதொடர்பாக விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் பரவின. அந்த விண்ணப்பத்தில் சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்ய பிரகாஷ் அனுமதி கேட்டுள்ளதாக ஒரு கடிதம், சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவியது. அரசியல் கட்சியினர் பெரும்பாலும் தங்கள் தலைவர்களின் உரை, கட்சி கொள்கைகள், எதிர்க்கட்சி மீது வைக்கப்படும் குற்றசாட்டுகளை தங்களுக்கு என்று இருக்கும் டிவி வாயிலாக மக்களிடையே கொண்டு சேர்க்கின்றனர். அதே போல் ரஜினி கட்சி ஆரம்பித்தால் தனது கட்சிக்கென்று தனி சேனல் துவங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.