2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தது. துணை சபா பதவியை காங்கிரஸுக்கு வழங்குவதாக மோடி அரசு முடிவு எடுத்த போது அதனை காங்கிரஸ் ஏற்கவில்லை. அந்த சூழலலில், 37 இடங்களை கைப்பற்றி மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுகவுக்கு வாய்ப்புக் கிடைக்க, அதனை ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து துணை சாபாநாயகராக தம்பிதுரை நியமிக்கப்பட்டார்.
தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை பெற்றுள்ளது. முந்தைய தேர்தலைப் போல துணை சபாநாயகர் பதவியை காங்கிரஸ் ஏற்க மறுத்தால் திமுகவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பை திமுக பயன்படுத்திக்கொள்ளுமா? என்கிற விவாதமும் துவங்கியுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா, பிரதிநிதியாக ஜெகன்மோகனை வி்ஜயவாடாவில் நேற்று சந்தித்தார்.
அப்போது துணை சபாநாயகர் பதவி வழங்குவது குறித்து அவரிடம் கூறினார். ஆனால் அதற்கு எவ்வித பதிலும் கூறாத ஜெகன்மோகன் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாக கூறியதாக தெரிகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுக்கு எதிரான அரசியல் நகர்வாக ஜெகன்மோகன் ரெட்டியை வளைத்து போட பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.