பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கிளியப்பட்டு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் குடியரசு தினத்திற்காக கொடியேற்றும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, பெரம்பலூர் மாவட்டக் கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ராமசந்திரன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். குறிப்பாக பெண்களுக்காகவே, பெண்ணினத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பிறந்து, வளர்ந்து, இறக்கும்வரை பெண்களுக்குப் பல நலத்திட்டங்களை செய்துவந்தவர்.
பள்ளி, கல்லூரி முதல் பெண் திருமணம், கர்ப்பிணி பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்குமான நலத்திட்டங்களையும் பெண்களுக்காகவே செய்தவர் ஜெயலலிதா. இதனை தாண்டி பெண்களுக்காக மகளிர் காவல் நிலையத்தை உருவாக்கிக் கொடுத்தவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்வாறு மக்களுக்காக உழைத்த ஜெயலலிதாவை, ஒரு பெண் என்றுகூட பாராமல், தி.மு.க.வில் உள்ள ராசா, ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தைப் பார்த்து அவதூறாகப் பேசுகிறார். இப்படி அவதூறாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது” என ஆர்.டி.இராமச்சந்திரன் பேசினார்.