
அதிமுக பொதுக்குழு வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்ஜய் குமார் அமர்வு வாசித்தது. இந்த தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இடைக்காலப் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செல்லும். அதேபோல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் அவரை சார்ந்துள்ளவர்களுக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாண்டவர்கள், கௌரவர்கள் எனச் சொல்லும்போது பாண்டவர்களுக்கு தான் வெற்றி. அதுபோல் தான் எங்களது வெற்றியும்” எனக் கூறினார்.