திண்டுக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மணிக்கூண்டில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்புரையாற்றிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்’ எனக் கூறி வருகிறார். ஆனால், காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது, காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தது. இதனை முன்னாள் பிரதமர் முலாயம்சிங்..” என உளறிய சீனிவாசன், மீண்டும் சுதாரித்துக்கொண்டு “மன்மோகன் சிங் ஆட்சியின்போதுதான் கொண்டுவரப்பட்டது” என பேசினார்.
கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. கூட்டம் துவங்க காலதாமதமானது. மேலும், தொடர்ந்து பேசியவர்கள் அதிக நேரம் பேசியதன் காரணமாக, பணம் கொடுத்து கூட்டி வரப்பட்ட பொதுமக்கள் வெறுப்படைந்து இருக்கைகளைவிட்டு எழுந்து கிளம்பிச் சென்றனர். இக்கூட்டத்தில் மாநகர மேயர் மருதராஜ், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் ராஜ்மோகன், ஒன்றியச் செயலாளர் ராஜசேகரன், கூட்டுறவு வங்கி தலைவர் பாரதி முருகன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.