சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தை சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கட்சிக்கு மட்டுமே நான் தலைமை ஏற்பேன். முதல்வர் பதவியை நான் ஏற்கமாட்டேன். என்னை வருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சி வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அப்படி மக்களிடம் மாற்றத்துடன் கூடிய எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன் என்றார். மேலும் 50 வயதிற்குள் இருப்பவர்களுக்கு 60% - 65% முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், மற்ற கட்சியில் இருந்து வரும் நல்லவர்கள் மற்றும் பிற துறைகளில் முன்னோடியாக உள்ளவர்களுக்கு 30% - 35% பதவி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சியில் மாற்று கட்சியில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் இணைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக, அதிமுக கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் அதிருப்தி நிர்வாகிகள் ரஜினி கட்சி ஆரம்பித்த உடன் இணைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் குறிப்பாக திமுக கட்சியில் இருந்து சமீப காலமாக ஒதுங்கியிருக்கும் மு.க.அழகிரி ரஜினி மீது கொண்டுள்ள நட்பால் ரஜினியுடன் இணைந்து செயல்படுவார் அல்லது ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதே போல் காங்கிரஸ் கட்சியில் இருந்த கராத்தே தியாகராஜனும் ரஜினியுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அதோடு பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவில் அதிருப்தியில் இருப்பவர்கள் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் செல்ல தயாராக இருப்பதால் திமுக, அதிமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை சமாதானம் செய்யும் முயற்சியில் திமுக, அதிமுக தலைமைகள் முடிவெடுத்திருப்பதாக கூறுகின்றனர்.