மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஈரோடு தொகுதி வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து வைகோ ஈரோட்டில், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை பரப்புரை மேற்கொண்டார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் தொடங்கி அவர் பேசியது "வரும் நாடாளுமன்ற தேர்தலானது ஜனநாயகத்துக்கும், பாசிசத்துக்கும் இடையே நடக்கிற யுத்தம் போன்றது. இங்கு அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். சைவமும், வைணவமும் இணைந்து தமிழை வளர்த்தது.
திமுக கூட்டணி எல்லா சமயங்களையும் மதிக்கின்ற கூட்டணி. ஆனால் ஒரே மதம், ஒரே மொழி என்ற அடிப்படையிலே கடந்த 5 ஆண்டு காலத்தில் நரேந்திர மோடி தலைமையில் பாசிச ஆட்சி நடந்து வந்திருக்கிறது.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்படும் என மோடி தெரிவித்தார். அவர் 2,000 பேருக்குக்கூட வேலை கொடுக்கவில்லை. வீட்டுக்கு வீடு ரூ.15 லட்சம் கொடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், 15 ரூபாய் கூட வந்து சேரவில்லை. கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை.
ஈரோடு எம்பியாக 2009 முதல் 2014 வரை இருந்த கணேசமூர்த்தி, 2014-ல் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த கமல்நாத்தை சந்தித்து வலியுறுத்தியதன் காரணமாக ஈரோடு மாநகருக்கு ரூ. 560 கோடி மதிப்பிலான ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சென்று வர தொழிலாளர்கள் பல ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.25 கட்டணத்தில் ரயில் பயண அனுமதி அட்டைகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
ஜி.எஸ்.டி.யால் தமிழகத்தில் 50,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலையிழந்து தவிக்கின்றனர். சிறுவணிர்களுக்கு இந்த அளவுக்கு சோதனைகளை கொடுத்துவரும் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராள சலுகைகளை வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 23 பெரிய தொழிலதிபர்கள் 90,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுவிட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடிக்கு வரிச்சலுகையை அளித்துள்ளது. ரூ.2.42 லட்சம் கோடி கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் புதிதாக அணை கட்டுவோம், பென்னிகுக் கட்டிய அணையை உடைப்போம் என்று கூறும் கேரள அரசுக்கு மத்திய அரசு பச்சைக் கொடி காட்டுகிறது. தமிழகத்தை வஞ்சிக்கிறது.
தஞ்சை மண்ணில் பல வகையான எரிவாயுவை எடுத்தால் இந்திய அரசுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் கிடைக்கும். தனியார் நிறுவனங்களுக்கு பல்லாயிர கணக்கிலான கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால், விவசாயிகள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறுவார்கள். இப்படிப்பட்ட கொடிய திட்டத்தின் மூலமாக வேதனைகளை கொடுத்த மத்திய அரசு தேவையா என்பதை தீர்மானிக்கும் நேரம் இது.
பொறியியல் படித்த பல லட்சம் மாணவர்கள் உரிய வேலை கிடைக்கப் பெறாமல் திண்டாடி வருகின்றனர். அவர்கள் குறைந்த ஊதியத்தில் ஏதேனும் வேலை செய்து பிழைக்கும் நிலை உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டினால், தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கப் பெறாமல் பாலைவனமாக மாறிவிடும். பின்னர் அந்த நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி, நிலத்தடியில் உள்ள மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற எரிவாயுக்களை எடுப்பார்கள். இதன் மூலம் 5 ஆண்டுகளிலே தமிழகம் பஞ்சத்தால் பாலைவனமாகிவிடும். தமிழகத்துக்கு இதுபோன்ற பேராபத்து இதுவரையிலும் வந்தது கிடையாது.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல். முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை காக்க முயலாமல், மத்திய அரசுக்கு கைக்கூலியாக அதிமுக அரசு உள்ளது. நிகழாண்டு ஆட்சி மாற்றங்களின் ஆண்டாக அமையும். பாசிச பாஜக ஆட்சியும், ஊழல் மிகுந்த அதிமுக அரசும் அகற்றப்படும். தேர்தலில் வீடு வீடாக பல ஆயிரம் ரூபாய் வழங்கி வெற்றி பெற்று விடலாம் என்று அதிமுகவினர் கருதுகின்றனர். அவர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். மக்கள் தங்களை விற்க தயாராக இல்லை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது போல் திராவிட கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மத்தியிலே அமைக்கின்ற அரசில், ராகுல் காந்தியே பிரதமர் பொறுப்பு ஏற்பார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் முக்கியமான கேள்வி, இனி இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்குமா, பாசிச சர்வாதிகாரம் நிலைக்குமா? என்பது தான். அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்" என்றார்.