ராகுல் காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் ஞாயிறன்று, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதற்காக ராகுல் காந்தி மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு வர இருப்பதாக கடந்த சில தினங்கள் முன்பு செய்திகள் வெளியானது.
சென்ற வருடம் ராஜீவ்காந்தியின் நினைவு நாளன்று அஞ்சலி செலுத்துவதற்காக ராகுல் காந்தி தமிழ்நாடு வந்திருந்தார். இதன் பின் இந்த ஆண்டு ராகுல் மேற்கொண்ட இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நாளையும் ராகுல் தமிழ்நாடு வர இருப்பதாகச் சொல்லப்பட்டது. கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் ராகுல் கலந்து கொண்டார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ராகுல் தமிழ்நாடு வருவார் என்றே காங்கிரஸ் தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராகுல் காந்தியின் தமிழக வருகை ரத்து செய்யப்படுவதாக தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்துவார்கள் என்றும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.