சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் வரும் 27-ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜெ.வின் நினைவிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்ததாரர்களின் நிலுவைத் தொகை ரூபாய் 1 கோடிக்கு மேல் பணம் கொடுக்காமல் அலைகழித்து வருவதாகவும், அதனைக் கேட்டால் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தனர். முன்னதாக அவர்கள் வருவது தெரிந்து, நினைவிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்ததாரர்கள், ‘எங்களின் உழைப்பின் தொகையை எங்களுக்கு வழங்கிடுக’ என போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களைக் காவல்துறையினர் உழைப்பாளர் சிலை அருகாமையிலே தடுத்து நிறுத்தினர்.
இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், “நாங்கள் மணல் கொடுத்திருக்கிறோம். குமார் என்பவர் கிரைன் வண்டி வைத்து பணி செய்த பணம் ரூபாய் 42 லட்சம் தர வேண்டியுள்ளது. இப்படி எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது. இதை நாங்கள் டெண்டர் எடுத்த கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டால், ‘இன்னும் எங்களுக்கு அரசு பணம் தரவில்லை, நான் என்ன செய்ய முடியும்’ என்று அலட்சியத்துடன் பேசுகிறார். திறப்பு விழா செய்துவிட்டால் அந்தப் பணத்தை எப்படி எங்களால் வாங்க முடியும். அதனால்தான் நாங்கள் ஜெ.வின் சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்,” என்றார்.
இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டபோது, அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துமனையில் சிகிச்சை பெறுவதாக தெறிவித்தனர். அதிமுக அரசு, சசிகலா விடுதலையின்போது தனக்கான மாஸ் காட்ட வேண்டும் என்று அதே நாளில் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைப்பாக இருந்த நிலையில், தற்போது இந்தப் பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.