கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெய் பாரத் என்ற பெயரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகையில், "காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் விரைவில் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக கர்நாடக மக்களுக்கு 4 முக்கியமான வாக்குறுதியை அளித்துள்ளோம். அதன்படி, வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்த திட்டங்களை உடனே அமல்படுத்துவோம். இந்த 4 வாக்குறுதிகளும் முதன் முதலில் கூடும் அமைச்சரவைக் கூட்டத்திலேயே முடிவு செய்து அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது என்று கேள்வி எழுப்பினேன். அது தொடர்பான புகைப்படத்தை நாடாளுமன்ற அவையில் காட்டினேன். நாட்டில் உள்ள விமான நிலையங்கள் அதானிக்கு வழங்கப்பட்டது. இதற்காக விதிகளை திருத்தியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினேன். மேலும் அதானியின் பினாமி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள 20 ஆயிரம் கோடி யாருடையது என்றும் கேட்டேன். உடனே என்னுடைய மைக்கை அணைத்து விட்டனர். நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஆளும் கட்சியினரே நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கி என் மீது குற்றச்சாட்டுகளை கூறினர். அதற்கு விளக்கம் அளிக்க கூட என்னை அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் என்னுடைய எம்பி பதவியையும் தகுதி நீக்கம் செய்து விட்டனர். இதன் மூலம் என்னை மிரட்ட முடியும் என்று நினைக்கிறார்கள் ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்படமாட்டேன்.
மோடியின் ஆட்சியில் செயலாளர் பதவியில் இருப்பவர்களில் ஏழு சதவீத பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மீது மோடிக்கு இருக்கும் அக்கறை இதுதானா. நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகங்களின் மக்கள் தொகை எவ்வளவு என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதற்கேற்ப அரசின் திட்டங்களை வழங்க வேண்டும். இல்லை என்றால் இவர்களுக்கு துரோகம் இழைத்தது போன்றதாகும்.
கர்நாடகாவில் பாஜக அரசு என்ன செய்தது என்றால் 40 சதவீதம் கமிஷன் பெற்று ஊழல் செய்துள்ளனர். எல்லா பணிகளிலும் 40 சதவீத கமிஷன் பெற்றுள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் நியமன முறைகேடு, கல்லூரி பேராசிரியர் நியமன முறைகேடு மற்றும் பொறியாளர்கள் நியமன முறைகேடு போன்ற எல்லா நியமனங்களிலும் முறைகேடு செய்துள்ளனர். கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். 40% கமிஷன் தொகையை கொண்டு மீண்டும் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் முயற்சி செய்வார்கள். அதனால் காங்கிரஸ் கட்சி குறைந்தது 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் பாஜகவின் ஊழலை நாம் தடுக்க முடியும்" என்று பேசினார்.