மத்திய அரசால் வழங்கப்படும் Z+ பாதுகாப்பை பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் நிராகரித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கான தனி தேசம் வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த மாதம் அக்குழுவின் தலைவர் அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் மாநில எல்லையில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் தொடர் நடவடிக்கைகளை மத்திய உளவுத்துறையினர் கண்காணித்தனர். அதே வேளையில் அம்ரித்பால் சிங்கின் கைதைத் தொடர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் பக்வந்த் மானின் மகள் சீரத் கவுர் மான் காலிஸ்தான் ஆதரவாளர்களால் மிரட்டப்பட்டுள்ளார் என பட்டியாலவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முதலமைச்சர் பக்வந்த் மானுக்கான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 49 வயதான பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மானுக்கு கடந்த வாரத்தில் இருந்து Z+ அதிகாரிகள் பாதுகாப்பு அளித்தனர். இந்நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என மத்திய அரசுக்கு பக்வந்த் மான் கடிதம் எழுதியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தான் எழுதிய கடிதத்தில், டெல்லியிலும் பஞ்சாபிலும் தமக்கு பஞ்சாப் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் மாநில அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசரம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் ஆகியோர் பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அவசர சட்டம் நிரந்த சட்டம் ஆவதற்கு எதிராக மாநில அரசுகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் மத்திய அரசின் பாதுகாப்பை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.