![Protest against AIADMK M.S meeting; 'Resolution against Annamalai'](http://image.nakkheeran.in/cdn/farfuture/N4wCT9HJ7GRscJOWppy0R85q3cDb9tOC70-h39IU9UM/1686642594/sites/default/files/inline-images/we45.jpg)
அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக உடன் கூட்டணி வேண்டாம் என நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது. அப்பொழுது இருந்தே அதிமுகவிற்கும் அண்ணாமலைக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இருப்பினும் இரு தரப்பு தலைவர்களும் கூட்டணியில்தான் உள்ளோம் எனத் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்ற அண்ணாமலையின் கருத்து அதிமுகவிற்கு அதிர்ச்சியைக் கொடுக்க, கூட்டணி எல்லாம் மேலே உள்ள டெல்லி தலைவர்கள் எடுக்கும் முடிவு தமிழக பாஜக தலைவர் சொல்வதெல்லாம் எடுபடாது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர்.
ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியுள்ளதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தரங்கெட்ட அண்ணாமலை எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்பொழுது அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், இக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பாஜகவிற்கு எதிரான போர்க்கொடியாக அல்லாமல் அண்ணாமலைக்கு எதிரான போர்க்கொடி என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.