Skip to main content

நேரில் வந்த பிரதமரை, ஆய்வு செய்யவும்விடாமல் அடைமழை கொட்டியுள்ளது! வேல்முருகன்

Published on 19/08/2018 | Edited on 19/08/2018
mo

 

நேரில் வந்த பிரதமரை, ஆய்வு செய்யவும்விடாமல் அடைமழை கொட்டியுள்ளது! எனவே இந்த கனமழை பாதிப்பை ”தேசிய பேரிடராக” அறிவித்து, தேவைப்படும் நிதியை கேரளாவுக்கு வழங்கவேண்டுமாய் ஒன்றிய அரசை வேண்டிக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்கிறார் அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன். இது குறித்த அவரது அறிக்கை:
 

’’கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தபடி,  ”100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வெள்ள பாதிப்பை கேரளா எதிர்கொண்டுள்ளது. அணைகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளன. இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். 2,23,139 பேர் 1,500 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.”

 

கேரளாவின் 14 மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும் கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் முப்படையும் இறக்கிவிடப்பட்டுள்ளது.

 

வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய பிரதமர் மோடி கேரளா வந்தார். திருவனந்தபுரத்தில் வந்திறங்கிய அவர், தனி விமானம் மூலம் கொச்சி சென்று, வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் கனமழை கொட்டத் தொடங்கியதாலும், மோசமான வானிலையாலும் ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் பிரதமர் கொச்சிக்கே திரும்பிச் செல்லவேண்டியதாயிற்று.

 

கொச்சியில் ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர், கேரளத்திற்கு வெள்ள நிவாரண உடனடி நிதியாக ரூ.500கோடி ஒதுக்குவதாகவும், முழுமையான சேத மதிப்பீட்டு ஆய்வுகளுக்குப் பிறகு உரிய நிதி அளிப்பதாகவும் அறிவித்தார்.

 

பிதமரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறது, பாராட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!நேரில் வந்த பிரதமரை, ஆய்வு செய்யவும்விடாமல் பெய்த இந்த அடைமழை-கனமழை என்பது முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தபடி, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதது!

 

இந்தப் பேய்மழை பற்றிச் சூழலியலாளர்கள் கூறுகையில், ”நவீனமயமாக்கத்தின் விளைவாக, உலகில் அதாவது இந்தப் புவிக்கோளத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமும்; நவீனமயம், வளர்ச்சி என்ற பெயரில், மேற்குத்தொடர்ச்சிமலையின் கேரளப் பகுதிகளை ஆக்கிரமிப்பாளர்கள் கபளீகரம் செய்து இயற்கையை அழித்துவிட்டதும்தான் இதுபோன்ற பேரிடர்களுக்குக் காரணம்” என்கின்றனர்.

 

வரலாறு காணாத இந்தப் பெருமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள்-உடமை இழப்புகளும் வரலாறு காணாததே! மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை மட்டுமல்லாது, முப்படையையுமே இறக்கிவிட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது!   எனவே இந்த கனமழை பாதிப்பை ”தேசிய பேரிடராக” அறிவித்து, தேவைப்படும் நிதியை கேரளாவுக்கு வழங்கவேண்டுமாய் ஒன்றிய அரசை வேண்டிக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! ’’

சார்ந்த செய்திகள்