காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ள ராகுல் காந்தியின் 50வது பிறந்தநாளை ஈரோடு மாவட்ட காங்கிரஸார் வழக்கம்போல இரு கோஷ்டிகளாக கொண்டாடினார்கள். இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் நடைபெற்றது. இவர் தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருஞாவுக்கரசர் ஆதரவாளர். இந்த விழா தொடங்கும் முன்னதாக இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராகுல் காந்தியின் பிறந்தநாளை வழக்கமாக கேக் வெட்டி கொண்டாடாமல், இந்தாண்டு கரோனாவால் பெரும் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உதவிடும் நோக்கில் விவசாயிகளின் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டது. இதனடிப்படையில் ஈரோடு தெற்கு மாவட்ட மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் 25,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியின் துவக்கமாக அலுவலகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மேலும் விவசாயிகளுக்கு விதை பொருட்கள், 15 குளங்களை சுற்றி பனை மரம் வளர்க்கும் விதத்தில் 3000 பனங்கொட்டைகள் நடுவதற்கான துவக்க நிகழ்வும் நடைபெற்றது. சில பொதுமக்களுக்கு அரிசி, பெட் சீட் வழங்கப்பட்டது.
அதேபோல் முன்னாள் தலைவர் ஈ வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்களான மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூலப் பட்டறையில் உள்ள ஜவகர் இல்லத்தில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா தனியாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். இவர்களும் 500 விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தினார்கள். தொடர்ந்து மதியம் நசியனூரில் விவசாயிகளுக்கு விதை பந்தும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சென்னிமலை வட்டாரம் வெள்ளோட்டில் விவசாயிகளுக்கு விதைகளும், மரக்கன்றுகளும் வழங்கினார்கள்.