323 உறுப்பினர்களின் ஆதரவுடன் மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள முஸ்லீம் அல்லாத மதத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில் 1955ம் ஆண்டில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டில் இந்த சட்டத்திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது மசோதா. ஆய்வு குறித்த அறிக்கையை நேற்று மக்களவையில் தாக்கல் செய்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு. இந்த மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக இன்று மக்களவையில் 4 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடைபெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் மூன்று உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது.