சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் தமிழக அரசால் கொடுக்கப்பட்ட உரையில் சில வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு ஆளுநர் படித்ததற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், அடுத்த நாளே தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டத்திற்கான அழைப்பிதழ் வெளியாகியிருந்தது. அதில் தமிழக அரசின் இலச்சினை இல்லாமல் மத்திய அரசின் இலச்சினை இருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கு பெற்றுள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை.