"2022-க்கு விடை கொடுப்போம், 2023-ஐ வரவேற்போம்" என்ற தலைப்பில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வரவேற்றார். கூட்டம் தொடங்கியவுடன் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, "குஜராத் முதலமைச்சராகவும், இந்தியாவின் பிரதமராகவும் தன் மகன் இருந்தும், தன் மீது அதிகாரத்தின் நிழல் கூட படாமல் வாழ்ந்த பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இந்த பொதுக்குழு அஞ்சலி செலுத்துகிறது" எனக்கூறி அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தான் இயற்றிய ஆத்திச்சூடியை வாசித்தார். அப்போது அவர், “ஔவையார் எழுதிய ஆத்திச்சூடியை தமிழர்கள் காலம் காலமாகப் படித்து வருகின்றனர். அவர் என்னை மன்னிக்க வேண்டும். கட்சி நலம் சார்ந்த புதிய ஆத்திச்சூடியை வாசிக்கிறேன்” எனக் கூறி வாசித்தார்.
"புதுவையில் 'பி' பிரிவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டங்கள் நடத்துவது, யூனியன் பிரதேசமான புதுவைக்குத் தேவையான அதிகாரம் இல்லாததால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசால் எதையும் செய்ய முடியாத நிலையை மாற்றி, புதுவையை நீடித்த வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்ய மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க நிர்ணயிக்கப்பட்டிருந்த 50% உச்சவரம்பு நீக்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் மத்தியிலும், மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வைச் சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக 25,000 ஏக்கர் விளைநிலங்களைப் பறிப்பதை தமிழக அரசும் என்.எல்.சி. நிறுவனமும் உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளிலும், தனியார் வேலைவாய்ப்புகளிலும் 80 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய உடனடியாகச் சட்டம் இயற்ற வேண்டும். சோழர் பாசனத் திட்டம், தருமபுரி உபரி நீர்த் திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களை நிறைவேற்ற 1 லட்சம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து போதை இல்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். சிங்களப் படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.