முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.
அதில் 2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் சுமூகமான உறவு இல்லை என்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் தாமதமின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதற்கு பின் நடந்த நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டுள்ளன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெ. இறந்த தேதி டிசம்பர் 5 என கூறுகையில் சாட்சியங்கள் டிசம்பர் 4 எனக் கூறுகின்றனர் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆஞ்சியோவிற்கு பரிந்துரைத்தும் இறுதிவரை அது அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர் சிவக்குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணை மேற்கொள்ள பரிந்துரைக்கிறது எனவும் ஆணையம் கூறியுள்ளது.
இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் “இந்தியாவிலேயே பெரிய மருத்துவ நிறுவனம் எய்ம்ஸ். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வல்லுநர்கள் வந்து அவர்கள் கொடுத்த கருத்துக்களையே ஆணையம் நிராகரித்துவிட்டது. இதுவே ஆச்சர்யமான விசயமாகத்தான் இருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனை என்பது நமக்கு பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவமனை. அவர்கள் மீதும் குற்றம் சொல்கிறார்கள். சசிகலா, விஜயபாஸ்கர் இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் எனவே அவர்கள் மீது குற்றம் சொல்கிறார்கள் என வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் இது அரசியல் காரணத்திற்காக அமைக்கப்பட்ட ஆணையம். ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் எல்லா அரசாங்கத்திலும் அவர் முக்கியமான பொறுப்பில் இருப்பார். ஏனெனில் அவர் சிறப்பாக செயல்படுவார். அப்படிப்பட்ட அதிகாரி மேலேயே குற்றச்சாட்டை இந்த ஆணையம் சொல்லி இருக்கிறது. சரி தமிழ்நாடு அரசாங்கம் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
தூத்துக்குடியில் 22 பேரை சுட்டு அதை விசாரிக்க அமைத்த ஆணைய தீர்ப்பும் வந்தது. நீதிபதி அருணா ஜெகதீசன் கொடுத்த அறிக்கையும் உள்ளது. அதைப் பற்றி யாரும் பேசாமல் இதை மட்டுமே பேசுகிறீர்கள். அதையும் ஊடகங்களில் போட்டால் மக்களுக்கு தெரியும்”. எனக் கூறியுள்ளார்.