
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆன்மீக திருவிழாவான ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும், இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கும்பமேளாவில் புனித நீராடி வருகின்றனர். கூட்ட நெரிசலில் திக்கு முக்காடி வரும் நிலையில் ரயிலில் இடம் இல்லாமல் ஏசி உள்ளிட்ட முன்பதிவு பெட்டிகளை உடைத்து பயணங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பான காட்சிகளும், செய்திகளும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கும்பமேளாவில் டிஜிட்டல் புனித நீராடல் என்ற சேவையை தீபக் கோயல் என்பவர் செயல்படுத்தி வருகிறார். அதாவது கும்பமேளாவில் பங்கேற்க ஆசை இருந்தும் வர முடியாதவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களுடைய புகைப்படங்களை அனுப்பினால், அந்த புகைப்படங்களை பிரிண்ட் எடுத்து அதை திரிவேணி சங்கமத்தில் நனைத்து வீடியோவாக காட்சிப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். இதற்குக் கட்டணமாக 1,100 ரூபாயை அவர் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

போட்டோவை நீரில் குளிப்பாட்டி வரும் தீபக் கோயல் என்பவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் பெண் ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் வீடியோ காலில் இருந்த கணவரை நீராட வைக்கும் விதமாக திரிவேணி சங்கமத்தில் செல்போனை குளிப்பாட்டி உள்ளார். கணவரால் வர முடியாத நிலையில் வீடியோ காலில் இருந்த கணவரை புனித நீராட வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இன்றுடன் கும்பமேளா நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.