நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேரங்கள் விறுவிறுப்படைந்திருந்தன. பாமகவை வளைப்பதில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதால் கூட்டணிகள் அமைவதில் இழுபறி நீடித்தன. இரண்டு கட்சிகளிடத்திலும் தனது பேரத்தைத் துவக்கியிருந்த பாமக, இறுதியில் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகியிருக்கிறது.
கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக சென்னை அடையாறு கிரவுண்ட் ப்ளாஸா ஹோட்டலுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மற்றும் பாமகவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர். அவர்களை அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் வரவேற்றனர்.
கூட்டணி ஒப்பந்தத்தில் ஓ.பி.எஸ்., இபிஎஸ், ராமதாஸ், ஜி.கே. மணி ஆகிய நான்கு பேரும் கையெழுத்திட்டனர். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ராஜ்யசபா சீட் தருவதற்கும் உறுதி தரப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்ததில் உற்சாகமாகியிருக்கிறார்கள் அதிமுக தலைவர்கள். இந்த உற்சாகம் தொண்டர்களிடமும் எதிரொலிக்கிறது.
அதிமுகவா? திமுகவா? எந்த பக்கம் பாமக பாயும்? என்கிற கேள்விகள் கடந்த ஒரு மாதமாகவே எதிரொலித்த நிலையில், அதிமுக கூட்டணியை டிக் அடித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஆனால், கடைசி வரை திமுக கூட்டணிக்காக தனது தந்தையிடம் வாதாடினார் டாக்டர் அன்புமணி. அதற்காக பல காரணங்களையும் அடுக்கினார். அதையெல்லாவற்றையும் உடைத்து அதிமுக கூட்டணிக்குள் பாமகவை இழுத்து வந்திருக்கிறார்கள் மாநில உளவுத்துறை அதிகாரிகள்.
திமுக கூட்டணியில் பாமக இருக்க வேண்டும் என விரும்பிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள், அதனை ராகுல்காந்தியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருந்தனர். இதனைத்தொடர்ந்து, ராகுல்காந்தியும் திமுகவின் கவனத்துக்கு எடுத்துச் சென்றதால் பாமகவுடன் பேசத்துவங்கியது திமுக. பேச்சுவார்த்தைகள் சுமாகமாகவே நகர்ந்தன. ஆனால், தேர்தல் செலவுகளுக்கான நிதி பேரங்களில்தான் பாமகவின் எதிர்பார்ப்புக்கு திமுக ஒத்துழைக்கவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தைகள் நீடித்தன. ஒரு கட்டத்தில், திமுக கூட்டணியில் பாமக ஐக்கியமாகப் போகிறது என்கிற தகவலை எடப்பாடியின் கவனத்துக்கு அனுப்பி வைத்தது மாநில உளவுத்துறை.
இதனை அறிந்து பதட்டமான எடப்பாடி, உளவுத்துறைக்கு சில அசைண்மெண்டுகளை கொடுத்ததோடு, பாஜக தேசிய தலைவர் அமீத்ஷாவிற்கும் தகவலை பாஸ் பண்ணினார். நிலைமையை உணர்ந்து அன்புமணியை தொடர்புகொண்டு பேசிய அமீத்ஷா , ‘’ கடந்த கால கசப்புகளை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். மீண்டும் பாஜகதான் மத்தியில் ஆட்சி அமைக்கும். இந்த முறை உங்கள் விருப்பத்தை டபுள் மடங்காக நிறைவேற்றுகிறோம். திமுக கூட்டணிக்குப் போகாதீர்கள் ‘’ என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், மாநில உளவுத்துறையின் மூவ்களை கவனித்து வரும் மத்திய உளவுத்துறையினரிடம் நாம் விசாரித்தபோது, ‘’ நாடாளுமன்ற தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு கிடைக்கும் வெற்றிதான் எடப்பாடியை பாதுகாக்கும். அதாவது, எம்.பி.க்கள் அதிக அளவில் வெற்றிபெற்றால் கட்சியை பாதுகாத்து விடமுடியும். இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்றால் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதே எடப்பாடியின் கணக்கு. அந்த வகையில், எடப்பாடியின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என விரும்பும் உளவுத்துறை அதிகாரிகள், பாமகவிடம் ரகசிய பேர அரசியலை துவக்கினர். திமுகவை தவிர்த்து அதிமுகவை பாமக டிக் அடித்ததில் மாநில உளவுத்துறை அதிகாரிகளுக்குத் தான் பெரிய பங்கு இருக்கிறது ‘’ என்கின்றனர் மத்திய உளவுத்துறையினர்.
அதிமுக கூட்டணிக்குள் பாமகவை அழைத்து வந்ததில் தமிழக அமைச்சர்கள் சிலருக்கு உடன்பாடில்லையாம். குறிப்பாக, அமைச்சர் சி.வி.சண்முகம் கடைசி வரை எதிர்ப்புத் தெரிவித்தபடி இருந்திருக்கிறார். அதனால்தான் என்னவோ, அதிமுக – பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வை புறக்கணித்திருக்கிறார் சி.வி.சண்முகம்.
பாமகவுக்கு 7 லோக்சபா சீட்டும் 1 ராஜ்யசபா சீட்டும் என வளைத்திருக்கும் அதிமுக, ஏ.சி.சண்முகம் மற்றும் பாரிவேந்தர் பச்சமுத்து ஆகியோரை உள்ளடக்கிய பாஜகவுக்கு 9 சீட்டும், தேமுதிகவுக்கு 4 சீட்டும் ஒதுக்கும் முடிவில் இருக்கிறதாம்!