‘ஒரு காவல் நிலையத்தைக்கூட நிர்வகிக்க முடியாமல், உண்மையை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி, பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்..’ என, சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைகள் குறித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்குப் பதிலடியாக, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘அ.தி.மு.க.-வின் புனிதத்தை, தி.மு.க. போன்ற பாவமூட்டை கட்சிகளால், ஒருபோதும் பாழ்படுத்த முடியாது’ என்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை இதோ -
சாத்தான்குளத்தில் நிகழ்ந்த தந்தை மகன் இருவரது உயிரிழப்புசம்பவத்தில் தமிழக அரசும், காவல்துறையும் எடுத்து வரும்நடவடிக்கைகள் குறித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசின் செயல்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. மறைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது குடும்பத்தினர், முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்திருக்கிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவிஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, வழக்கும் கொலை வழக்காக மாற்றப்பட்டு, விரிவான, விரைவான விசாரணையை தமிழக காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி பிரிவு மேற்கொண்டு வருகிறது. இதனை, சாத்தான்குளம் பகுதிவாழ் மக்கள், மனதார வரவேற்றுள்ளனர். சில இடங்களில் இளைஞர்களும், பொதுமக்களும் உணர்ச்சிப் பெருக்கில் பட்டாசுகளை வெடித்துத் தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்றுப் பாராட்டியிருக்கின்றனர். ஆனால், இவையாவிற்கும் நேர்எதிராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து தமிழக காவல் துறையின் நடவடிக்கைகள் மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளையும், தரம் தாழ்ந்த விமர்சனங்களையும் தொடர்ந்து கூறி வருகிறார்.
முதலமைச்சர், ஜுன் மாதம் 24-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 22-ஆம் தேதி இரவு, பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகக் கூறியதையடுத்து, சிறைக் காவலர்கள் பென்னிக்ஸை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் என்றும், பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி இரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளார் என்றும், மேலும் பென்னிக்சின் தந்தை திரு. ஜெயராஜ், தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்ததையடுத்து, சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் என்றும், சிகிச்சையில் இருந்த ஜெயராஜ் 23.6.2020 அன்று காலை 5.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தாமாக முன்வந்து (அதாவது 24.6.2020 அன்று) இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது என்றும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வழக்குக் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும், பிரேத விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்து, அதன் அறிக்கைகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, இவ்வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்து, மனுவை 26.6.2020 க்கு ஒத்தி வைத்தனர் என்றும், அந்த அறிக்கையில் கூறியிருந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் அவர்களின் அறிக்கையின் பேரிலும் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இது தொடர்பாக பிறப்பிக்க உள்ள உத்தரவின் அடிப்படையிலும், இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.
எந்த ஒரு குற்ற சம்பவத்தின் அடுத்த விநாடியிலேயே, அதன் முழு விவரங்களும் வெளிவந்துவிடாது. முதற்கட்ட விசாரணை, சாட்சிகளைச் சேகரித்தல், சூழல் சார்ந்த ஆதாரங்களைத் திரட்டுவது, பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெறுவது போன்றவற்றின் அடிப்படையில்தான், ஒரு குற்றத்தின் முழு விவரங்களும் திரட்டப்பட்டு, வழக்கின் போக்கும், குற்றவாளிகளும் உறுதி செய்யப்படுகிறார்கள்.
அதிலும், குறிப்பாக காவல் நிலையங்களில் நிகழும் மரணங்களிலும், விசாரணையின் போது நிகழும் உயிரிழப்புகளிலும், முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்துவிட்டு, அதன் பிறகு கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் திரட்டப்படும் செய்திகள் ஆகியவற்றைக் கொண்டே, அது கொலையா? தற்கொலையா? இயற்கை மரணமா? என்பது உறுதி செய்யப்படும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை. இந்த நடைமுறைதான், சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரது மரணத்திலும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளது ஆனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் கனிவுள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், மறைந்த இருவரது குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் உடனடியாக நிவாரணம் வழங்க ஆணையிட்டதோடு, கல்வித் தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் ஆணையிட்டார்கள். மேலும் இச்சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனையை, உட்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தருவோம் என்பதைத் தெளிவுபடுத்தியதோடு, நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் விரைந்து நடத்தப்படும் வழக்காக, இவ்வழக்குக் கையாளப்படும் நிலையில், வழக்கு விசாரணைக்கு எவ்வித இடையூறோ, குந்தகமோ ஏற்பட்டுவிடாத அளவில், மதுரை உயர்நீதிமன்றத்தின் கருத்தறிந்து, இவ்வழக்கை மத்திய புலனாய்வு பிரிவான சி.பி.ஐ.-யிடம் ஒப்படைக்கப்படும் என்பதையும், முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதில், எங்கே தமிழக அரசு தவறிழைத்தது? எங்கே தமிழக காவல்துறை காலதாமதம் செய்தது? எங்கே முதலமைச்சர் முரண்பாடாகப் பேசினார்? எங்கே நீதி மறுக்கப்பட்டது? ஸ்டாலின், இதனைத் தெளிவுபடுத்த வேண்டும். அரசியல் செய்வதற்கென சில சம்பவங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதற்கான திரைக்கதையை வடநாட்டு ஆளை வைத்து எழுதிக்கொண்டு, அரசின் மீதும், விசாரணை அமைப்புகளின் மீதும், பழிபோடுகிறது. அதற்கு பக்கபலமாக, தங்கள் குடும்ப ஊடகங்களை வைத்து பொதுமக்களிடையே அரசுக்கு அவப்பெயரை உருவாக்கிட, தி.மு.க. திட்டமிட்டு மலிவான அரசியலைச் செய்து வருகிறது. அதேவேளையில், தி.மு.க.-வாலும், அக்கட்சியினராலும் நடத்தப்பட்ட நெஞ்சம் பதறுகிற பல கொடிய குற்றங்கள் மற்றும் அது தொடர்பான வழக்குகளில் மட்டும் தி.மு.க. வாய்த் திறந்து பேசாத பாறாங்கற்களாகிப் போவது பரிதாபத்திற்குரியது.
உதாரணமாக, தி.மு.க. மகளிரணி பிரமுகர் பால் மலரின் படுகொலை, படுகொலை செய்யப்பட்ட தா. கிருட்டிணனின் வழக்கு, அண்ணாநகர் ரமேஷின் ஒட்டுமொத்த குடும்பமும் மர்மமாகச் செத்துப்போனது, பெரம்பலூர் சாதிக்பாட்ஷாவின் மர்ம மரணம் போன்றவற்றில் மட்டும் தி.மு.க.-வும், அதன் தலைமையும் பேச மறுப்பதும், வாய்மூடி மௌனியாய் இருப்பதும், அவ்வழக்குகளுக்கான நீதி நீர்த்துப்போக வேண்டும் என்று வியர்த்துப்போகும் அளவுக்கு விழிப்பதும் ஏன்? என்று ஸ்டாலின் விளக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வெளிப்படையாகவும், நேர்மையாகவும், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மாட்சிமைமிக்க நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் கொண்டு செல்லப்படும் வழக்கின் மீது அவதூறு விதைப்பதென்பது, மகுடத்தின் மீது வெறிபிடித்து அலைகிற ஒரு மனநோயாளியின் காரியமே. எனவே இனியும் தி.மு.க., மரணங்களை முன்வைத்து, தந்திர அரசியலையும், தரங்கெட்ட போக்கையும் தொடருமேயானால், அக்கட்சி விரைவில் மக்களால் மயானத்திற்கு அனுப்பப்படும் என்பது நிச்சயம்.
அன்றைய தி.மு.க. ஆட்சியில், சென்னையின் இதய பகுதியான ராதாகிருஷ்ணன் சாலையில், உணவு விடுதி ஒன்றில் ஓரமாக வாகனத்தை நிறுத்தச் சொன்னதற்காக, துப்பாக்கி எடுத்து ஓட்டல் ஊழியர்களைச் சுட்டவர், அதிகாரம் தாங்கி இருந்தவரின் அடர்த்தியான உறவினர் என்பதற்காக, ஒரு மூத்த காவல்துறை அதிகாரியையே சம்பவ இடத்திற்கு அனுப்பி, தடயங்களை அழித்ததோடு, அச்சம்பவத்தில் தப்பிப் பிழைத்த வடநாட்டு ஊழியர்களை மிரட்டி, வடநாட்டுக்கே வழியனுப்பி வைத்தவர்கள் யார் என்பதை இந்த உலகமும், உலக மக்களும் நன்கு அறிவார்கள். எனவே, தான் 'திருடி பிறரை நம்பாள்' என்னும் கதையாக, புரளி விதைப்பதும், புலனாய்வு புலிகள் போல தங்களை நினைத்துக்கொண்டு புளுகு மூட்டைகளை விதைப்பதும் ஆக்கம் அற்ற செயலாகும். அறம் கெட்ட அரசியலாகும்.
அனைத்திந்திய அண்ணா தி.மு.க., ஆன்மீக நெறிகொண்டு நடைபோடுகின்ற அன்பியல் இயக்கம். நேர்மை, அறம், நியாயத்தின்பால் நடக்கின்ற புனித இயக்கம். இதன் புனிதத்தைத் தி.மு.க. போன்ற பாவமூட்டை கட்சிகளால் ஒருபோதும் பாழ்படுத்த முடியாது. எதுவரினும் எதிர்கொண்டு, எந்நிலையிலும் புண்ணியத்தின் வழியிலிருந்து பிறழாது, சட்டத்தின் வழியில், தர்மத்தின் பாதையில் செங்கோல் செலுத்துகிற எங்கள் எளிமையான சாமானிய முதல்வர், எடப்பாடியாரின் நல்லாட்சியினை நரி சூழ்ச்சிகளால் ஒருபோதும் களங்கப்படுத்த முடியாது'' எனக் கூறியுள்ளார்.
‘சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்‘ என்று, தமிழகமே கொந்தளித்துக் கிடக்கும் நிலையில், தி.மு.க.-வும், அ.தி.மு.க.-வும், ஒருவர் மீது ஒருவர், மாறி மாறி குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கின்றன.