
தனது தாய்க்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஒருவர் மனு தாக்கல் செய்ததை அடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
77 வயதைச் சேர்ந்த பெண்ணுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் மூவருக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகன், மனைவி மற்றும் இரண்டு மகன்களை விட்டுச் சென்று இறந்துவிட்டார். இந்த நிலையில், அந்த பெண்ணின் கணவர் 1992இல் இறந்துவிட்டதால், அவருடைய சொத்தை மகனுக்கும், இரண்டாவது மகனின் பேரனுக்கும் பிரித்து வழங்கப்பட்டது. அதன் பின்பு, 1993ஆம் ஆண்டில் அந்த பெண்ணுக்கு பராமரிப்புத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. தனக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லாததால், அந்த பெண் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், கீழ் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாய்க்கு மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று மூத்த மகனுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மகன் பஞ்சாப் மற்றும் ஹரியான உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது தாய் தன்னுடன் தங்காததால், கீழ் நீதிமன்ற உத்தரவு செல்லாது என்று பெண்ணின் மகன் மனுவில் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பெண்ணின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வருமான ஆதாரமும் இல்லை. அன்றாட வாழ்வாதாரத்திற்கு வேறு வழியும் இல்லை., தனது மகளின் தயவில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி ஜஸ்குர்பிரீத் சிங் பூரி கூறியதாவது, ‘இது வழக்கு தற்போது பிரதிபலிக்கும் கலியுகத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது இந்த நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. தனது தந்தையின் சொத்தை வாரிசாகக் கொண்டு, 77 வயதான அவரது தாய்க்கு எந்த வருமான ஆதாரமும் இல்லாமல், திருமணமாகி தனது மகளுடன் வசித்து வரும் சொந்த தாய்க்கு எதிராக மகன் மனுவைத் தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நிறைவேற்றப்பட்ட உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. மாறாக, ரூ. 5,000 தொகை கூட கீழ் பக்கத்தில் இருந்தது என்று குறிப்பிடுவது பொருத்தமற்றதாக இருக்காது’ என்று அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.