வேலூர் கிழக்கு மாவட்டம் பா.ம.கவின் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் தலைவர், செயலாளர், மகளிர் சங்கத் தலைவர், செயலாளர் தேர்வுக்கான நியமன மனு பெறுவதற்கான கூட்டம் வேலூர் அடுத்த பொய்கையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மனு பெறுவதற்கு முன்னதாக பா.ம.க மாநில சமூக நீதி பேரவை தலைவரும், வழக்கறிஞருமான பாலு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, “தர்மபுரி மாவட்டம் பென்னகரத்தில் தங்கள் பகுதியில் மதுக் கடை அமைக்க வேண்டும் என பெண்கள் போராட்டம் நடத்தினார்கள் என்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நாம் தமிழகத்தில் தான் உள்ளோமா என்று சந்தேகம் எழுந்தது. இதற்கு பெண்கள் கூறிய விளக்கம், 20 கிலோ மீட்டர் தொலைவில் டாஸ்மாக் உள்ளது. தங்கள் பகுதியில் அதிகமான சந்து கடைகள் உள்ளது. அதில் அதிக விலைக்கு மது விற்கிறார்கள், இதனால் சிரமப்படுகிறோம் எனக் கூறினார்கள். இன்றைக்குத்தான் அதன் பின்னணி தெரியவந்துள்ளது. தமிழக அரசு புதிதாக ஒரு கடையை கட்டி திறக்க இருந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்த்து போராட்டம் நடத்திய உள்ளார்கள். அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு 200 ரூபாய் கொடுத்து அழைத்து வருவது போல் நமது பகுதியில் உள்ள சந்து கடைக்கு எதிராகப் போராடலாம் என அழைத்துப் போனார்கள். ரங்கபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் இன்று ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் மதுக் கடை வேண்டும் என போராடவில்லை, சந்து கடைகளை அகற்றக் கூறித்தான் போராடினோம். எங்களை இதற்காகத்தான் 300 ரூபாய் கொடுத்து அழைத்துப் போனார்கள் என என்னிடம் கூறினார். அப்பாவி பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் எனத் தெரிந்தும் அவர்களையே அழைத்து சென்று மதுக் கடையை திறக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட செய்தது அசிங்கம், கேவலம். இதற்கு அந்த பகுதி டாஸ்மாக் மேலாளரையும், மாவட்ட ஆட்சியரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டும் முயற்சியை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
இதேபோன்றுதான் தமிழகத்தில் 20% விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.5 சதவிகிதத்தை விட கூடுதல் இடங்களைப் பெறுகிறார்கள் என்ற தவறான தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி செய்கிறது. சமூக நீதிக் கொள்கையில் தற்போது தி.மு.க தள்ளாடி, தடுமாறி, தடம்மாறிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சனையில் ஏன் தடுமாறுகிறது என தங்கள் நிலைபாட்டை அவர்கள் விளக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை மத்திய அரசுக்கு தான் அதிகாரம் என்று சொல்கிறது. இது மிக தவறான போக்கை கடைபிடிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. 10.5 சதவிகித இட ஒதுக்கீடு தருவதாக நீங்கள் (திமுக) நடத்திய நாடகத்தை நாங்கள் நம்பி விட்டோம். 1989ல் இருந்து பயனடைந்த விவரங்களை தாருங்கள் எனச் சொல்கிறோம் இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு. தற்போது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கிடைத்த ஏதோ ஒரு தகவலை வைத்து வன்னியர்கள் அதிக இடம் பெறுகிறார்கள் என்ற தோற்றத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது என்பது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. வன்னியர்களுக்கு தி.மு.க அரசு மிகப் பெரிய அளவில் துரோகம் இழைக்கிறது. தி.மு.க முதல்வர் ஒட்டுமொத்தமாக கைவிரித்தது தமிழகத்தில் உள்ள வன்னியர்களின் முகுதுகில் குத்தும் பணியை தமிழக முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். இதற்கான தகுந்த பாடத்தை நாங்கள் புகழ்த்துவோம். மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தி.மு.க எதன் அடிப்படையில் சொல்கிறது.
பா.ம.க பா.ஜ.கவின் கூட்டணியில் உள்ளது, நீங்கள் போய் மத்திய அரசிடம் கேளுங்கள் என்கிறார்கள். நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஒருவேளை மத்திய பா.ஜ.க அரசு தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் எனக் கூறினால் தமிழ்நாடு அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுமா? தேசிய கொள்கை தான் தமிழகத்தின் கொள்கையா? பல்வேறு உள் ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என்றால் மாநில அரசு நடத்தக்கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு தான் சரியாக இருக்கும். இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் மிகப்பெரிய முட்டாள்தனத்தை சாதிவாரி கணக்கெடுப்பில் தி.மு.க செய்து வருகிறது. நீதியரசர் குலசேகரன் ஆணையம் கடந்த ஆட்சியில் மேற்கொண்டு வந்த பணிகளை இப்போது தி.மு.க கிடைப்பில் போட்டு விட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து, அதில் நீதிபதி குணசேகரனின் அறிக்கை கிடைக்கப்பெற்ற உடன் 69% இட ஒதுக்கீட்டுக்கான அளவை நாங்கள் உறுதி செய்வோம் எனத் தாக்கல் செய்துள்ளது. மராட்டா வழக்கு முடிந்து மீண்டும் விசாரணைக்கு வருகிற பொழுது இந்த வழக்கை எடுத்துக் கொள்கிறோம் என உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. தற்போது மராட்டா வழக்கு முடிந்திருக்கிறது. 69% இடஓதுக்கீடு நீதிமன்றத்தில் வரும்போது தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது. 69% இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வருகிறது என்றால் அதற்கு முழு காரணம் முதல்வரும், தி.மு.கவும் தான்” எனக் கூறினார்.
இதனை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மகள் சிறுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் பாலு, “சிறுமி மீது வழக்கு தொடுப்பது என்பது வினோதமாக உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை வெளியே வர வேண்டும் என சி.பி.ஐ விசாரணை கூறி போராட்டம் நடத்துவது என்ன தவறு. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பா.ரஞ்சித்தோ, ஆம்ஸ்ட்ராங் மனைவியோ கேட்பது என்ன தவறு. போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் மகள் மீதும் தமிழக அரசு வழக்கு பதிவு செய்வது ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்குவது போன்றது” என்றார்.
இதையடுத்து, சிறுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அன்புமணி தவறாக கூறியிருக்கிறார் என அரசு விளக்கமளித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அங்கு என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியாதா? காவல்துறையில் எங்களுக்கு ஆட்கள் இல்லையா? முதலில் பெயரை சேர்த்துவிட்டு நாங்கள் கூறிய பிறகு நீக்குகிறார்கள். ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். எப்போதுமே தி.மு.க ஆட்சியில் இல்லாத போது மனித உரிமை, ஜனநாயகம் பேசும். ஆட்சிக்கு வந்த பிறகு அதன் குரல்வலையை நெருக்கும். சவுக்கு சங்கர் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டதை மாவீரன் குரு அவர்கள் மீது எப்படி தடுப்பு காவல் சட்டம் போட்டு அணுகினார்களோ அதே வகையில் தான் இதை பார்க்கிறேன். ஒரு வழக்கு முடிந்த பிறகு இன்னொரு வழக்கு போடுவது என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது இந்த நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.