தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை, வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் ஆகிய பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது, முக்கியக் கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.
தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்தியது. அதில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் மார்ச் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்கிறார்.
இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க தி.மு.க.விடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்ததாகக் கூறப்பட்ட நிலையில், இந்தச் செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை ஒருமுறை மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.