
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில மாதங்களாக நிமோனியா உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாகத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதே சமயம் வயது முதிர்வு காரணமாக அவருக்குச் சிகிச்சை அளிப்பது மருத்துவத்துறை நிபுணர்களுக்குச் சவாலாக இருந்தது. இருப்பினும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் நேற்று (21.04.2025) காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று காலை 07.35 மணியளவில் போப் பிரான்சிஸ் காலமானதாக வாட்டிகன் சிட்டி தகவல் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவு சர்வதேச அளவில் பலரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு உலகம் முழுவதில் இருந்தும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த 3 நாட்களும் அரசு சார்பில் எவ்வித கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழக அரசு சார்பில் இன்றும் நாளையும் என 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவுக்குத் தமிழக சட்டப்பேரவையில் இன்று (22.04.2025) இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான இரங்கல் குறிப்பை அப்பாவு பேரவையில் வாசிக்கையில், “கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும், பரிவோடும், முற்போக்கு கொள்கைகளோடும், பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான போப் பிரான்சிஸ் 88வது அகவையில் நேற்று வட்டிகான் நகரில் மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொன்னா துயரமும் கொள்கிறது. இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்தார். அதன் பின்னர் 2 விநாடிகள் அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று போப் பிரான்சிஸுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.