சட்டமன்ற கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விவாதத்தின்போது, சட்டம் மற்றும் நீதி நிர்வாகம், சிறைத்துறைகளின் மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது துறை ரீதியான கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம் எந்த விதமான குறிப்பும் இல்லாமல் பேசினார்.
பொதுவாக எதிர் கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலுரை வழங்கும் போது, தங்களுடைய துறை சார்ந்த முக்கிய குறிப்புகளை கையில் வைத்துக்கொண்டு, அதை பார்த்து படிப்பார்கள். ஒரு சில அமைச்சர்கள் முழு பதிலுரையையும் குறிப்புகளை பார்த்தே படிப்பார்கள். ஆனால் சட்டத்துரை அமைச்சர் சண்முகம், கையில் ஏதும் குறிப்பில்லாமல் சட்டத்துறை, நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் உள்ளிட்ட மூன்று துறைகளில் தமிழக அரசு இதுவரை என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றியுள்ளது, இனிமேல் செயல்படுத்தவுள்ளது என்பது குறித்த அனைத்து தகவல்களை புள்ளி விவரத்தோடு பேசினார். அமைச்சரை அழைத்து குறிப்பில்லாமல் பேசியதற்கு முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.