
மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வரும் துரை வைகோ, தான் வகித்து வரும் மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் (19.04.2025) அறிவித்தார். மேலும் இது தொடர்பாக, ‘கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருகிறார்’ என்று தனது அறிக்கையில் துரை வைகோ குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த அறிவிப்பு மதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
துரை வைகோ ஒருவர் என குறிப்பிட்டது அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை தான் மறைமுகமாக கூறியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான், வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளமாக எப்போதும் இருப்பேன் என மல்லை சத்யா தெரிவித்திருந்தார். அதே சமயம், தனது நிலைப்பாட்டில் இருந்து விலகப் போவதில்லை என்றும், கட்சிக்குள் வீணாக குழப்பம் ஏற்படுத்தியது மல்லை சத்யா தான் என்றும் துரை வைகோ தெரிவித்திருந்தார். இப்படியான பல்வேறு அரசியல் சலசலப்புகளுக்கு இடையே மதிமுக சார்பில் நேற்று (20.04.2025) அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் உள்ள எழும்பூரில் நடைபெற்றது. அக்கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் மதிமுகவில் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மதிமுகவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு கட்சியின் நிர்வாகக் குழுவில் எனது மனப்பூர்வமான வருத்தத்தை என் உயிர் தலைவர் வைகோவிடமும், நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேன். இது போன்ற சூழல் இனி எதிர்காலத்தில் நிகழாது.
திராவிட ரத்னா தலைவர் வைகோவுக்கும், கட்சியின் எதிர்காலம் முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோவுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று நான் உறுதி அளித்தேன். இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு சகோதரர் துரை வைகோ முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என்று நிர்வாகக் குழுவில் அறிவித்தது எனக்கும், கட்சித் தோழர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நானும், முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோவும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோவுக்கும், கட்சிக்கும் துணையாக செயல்படுவோம். கட்சியைக் கட்டிக் காப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மதிமுக வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.