
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தையொட்டியுள்ள காமராஜ் நகரில் வசித்து வரும் தம்பதிக்குத் திருமணம் ஆகி கடந்த 15 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் குழந்தை இல்லை என்பதையும், குழந்தையைத் தத்து எடுப்பதற்காக அவர் பல்வேறு மருத்துவர் மற்றும் நண்பர்களிடம் தகவலைக் கேட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த தம்பதி வீட்டில் ஒரு பச்சிளம் குழந்தை இருந்து அதைக் கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து குழந்தைக்கு நல பாதுகாப்பு அலுவலர் சித்ராவதி சம்பந்தப்பட்ட தம்பதி வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான விசாரணையில் வடலூரில் சத்திய பிரியா (வயது 65) என்ற சித்த மருத்துவர் குழந்தையை விற்பனை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் சத்யபிரியா வடலூரில் சித்தா கிளினிக் ஒன்று வைத்துள்ளார். இங்குக் கல்லூரி மாணவிக்கும், அவரது காதலனுக்கும் பிறந்த குழந்தைக்கு அவர் பிரசவம் பார்த்து உள்ளார். அவர்கள் குழந்தை வேண்டாம் எனக் கூறியதால் அந்த குழந்தையை ரகசியமாகச் சிதம்பரம் பகுதியில் இருக்கும் தம்பதியினரை அழைத்து ரூ 1 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட சத்திய பிரியாவை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தையைக் கைப்பற்றி கடலூர் மாவட்ட குழந்தைகள் நல மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.