அதிமுக கூட்டணியில் கூடுதல் இடங்களைப் பெற தேமுதிக தொடர்ந்து போராடி வருகிறது. தொடக்கத்தில் பாமகவுக்கு கொடுக்கப்பட்ட எண்ணிக்கை தங்களுக்கும் வழங்க வேண்டும் என தேமுதிக தரப்பில் அதிமுக தலைமைக்குச் சொல்லப்பட்டது. ஆனால், அது சாத்தியமில்லை என அதிமுக தேர்தல் பேச்சுவார்த்தை குழு கூறிவிட்டது. இந்த நிலையில், தேமுதிக - அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
பாஜக தேசியத் தலைமை அதிமுக கூட்டணியில் தேமுதிகவை தவிர்க்கக்கூடாது, பேச்சுவார்த்தை நடத்தி அந்தக் கட்சியை நம் அணியோடு தான் வைத்துக்கொள்ள வேண்டுமென அதிமுக தலைமைக்கு உத்தரவிட்டது. வேறு வழியில்லாமல் தேமுதிகவுக்கு 12 சீட் வரை கொடுக்க அதிமுக ஏறி வந்தது. ஆனால், தேமுதிகவோ குறைந்தபட்சம் 20 இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் எனக் கறாராகக் கூறியிருந்தது.
இரு கட்சிகளின் தனிப்பட்ட நிர்வாகிகள் நடத்திய ரகசியப் பேச்சு வார்த்தையின் படி இறுதியாக 15 இடங்கள் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பதினைந்து இடங்களும் அதிமுக ஒதுக்கும் தொகுதிகள்தான் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேற்படி ஒவ்வொரு தொகுதி தேர்தல் செலவுகளை அதிமுக தலைமை கவனித்துக் கொள்ளும் என்பதோடு தேமுதிக தலைமைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் சரி செய்வதாக உறுதி கொடுத்துள்ளார்கள். இந்தப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்ட நிலையில் பாஜக போட்டியிடக்கூடிய தொகுதிகளை இறுதிசெய்த பிறகு தேமுதிகவுக்கான எண்ணிக்கையும் போட்டியிடும் இடங்களையும் அதிமுக தலைமை முறைப்படி அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேமுதிக தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை அதிமுகவிடம் கொடுத்துள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொகுதிகள் வருமாறு, ஆலந்தூர், விருகம்பாக்கம், மற்றும் திருவள்ளுர், திருத்தணி, ஆம்பூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், விருத்தாசலம், சோளிங்கர், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், ஈரோடு கிழக்கு, சேலம் வடக்கு, தருமபுரி, மதுரை மத்தி, விருதுநகர், மேட்டூர், மயிலாடுதுறை, பண்ருட்டி, பேராவூரணி ஆகிய தொகுதிகள் உள்ளது. கூட்டணி உடன்பாட்டில் ஒரு வகையில் தேமுதிகவை செட்டில்மென்ட் செய்துவிட்டதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.