
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் (27.06.2024) பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர், “கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி ஓசூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 5 இடங்களைத் தேர்வு செய்தது. அதனை ஆய்வு செய்யும் பணியை, இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு ஒப்படைத்தது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் 2 இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கத் தமிழ்நாடு அரசு தேர்வு செய்தது. அதாவது தனேஜா தனியார் விமான நிலைய பகுதியான கிழக்கு ஓசூர் மற்றும் வடக்கு சூளகிரி ஆகிய இரு இடங்களையும் தமிழ்நாடு அரசு தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் விமான போக்குவரத்து ஆணையம் வரைவு சாத்தியக்கூறு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது.
அந்த ஆய்வறிக்கையில், ‘தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ள 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் வான் பரப்பு தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பு தொடர்பாக இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையைத் தமிழ்நாடு அரசிடம் தாக்கல் விமான போக்குவரத்து ஆணையத்தில் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையம் அமைக்க ஒப்புதல் கோரி பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்குத் தமிழ்நாடு அரசு கடிதம் எழுத வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.