முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளனர்.
இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “14 வயதில் அரசியலுக்குள் வந்தேன். இந்த 55 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் என் கால் படாத கிராமம், நகரம் இல்லை என்று கூறும் அளவு பயணங்களை மேற்கொண்டேன். சாலைகள் இல்லாத கிராமங்களிலும் கருப்பு சிவப்பு கொடியை ஏற்றி வைத்தேன். மேடு பள்ளம், வெயில் மழை, இரவு பகல் என கால நேரம் பார்க்காமல் தமிழக மக்களுக்கு உழைப்பது ஒன்றே பணி என்று இருந்த எனக்கு 70 வயது ஆகிவிட்டது. இதை என்னாலேயே நம்ப முடியவில்லை. நினைத்துப் பார்த்தால் எல்லாம் நேற்று நடந்ததை போல தோன்றுகிறது. ஆனால் என் பயணம் நெடிய பயணம். மக்களுக்காக போராடும் நமக்கு கால நேரம் எதுவும் கிடையாது. மார்ச் 1 பிறந்தநாள் என்று சொல்லும் பொழுது தான் எனக்கு வயது நினைவிற்கு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சட்டென கடந்து விடுகிறது. நாளையும் வழக்கம் போல பணிகளை தொடர்ந்து விடுவேன். எனக்கு 70 வயது என்று சொல்லும் பொழுது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். வயது என்பது மனதை பொறுத்தது. இளமை என்பது வயதில் இல்லை; முகத்தில் தான் இருக்கிறது. லட்சியவாதிகளுக்கு என்றுமே வயதாவதில்லை.
இளைஞர் அணி செயலாளராக இருந்த பொழுது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். அப்பொழுது இருந்த அதே உற்சாகத்துடன் தான் இன்றும் இருக்கிறேன். எழுபதாவது பிறந்தநாளில் உங்களை நம்பி உங்கள் முன் ஒரு உறுதிமொழி எடுக்கிறேன். ‘பேரறிஞர் அண்ணா அவர்களே நீங்கள் உருவாக்கிய கழகத்தை., கலைஞர் கட்டிக் காத்த கழகத்தை., எந்நாளும் நிரந்தரமாக ஆட்சி பொறுப்பை வைத்திருப்பேன்’. இது நான் முதலமைச்சராக இருக்க வேண்டும் அல்லது 30 பேர் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த இயக்கம் அதற்காக தோற்றுவிக்கப்பட்டது அல்ல. திராவிட இயக்க அரசியல் நெறிமுறைப்படி தமிழகத்தை கல்வியில் பொருளாதாரத்தில் முன்னேற்றி காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. கொள்கையை பரப்ப கட்சி; கொள்கையை நிறைவேற்ற ஆட்சி; இந்த இரண்டின் வழியாக தமிழகத்தை என்றும் தலை நிமிர வைப்போம். இதை இரண்டு ஆண்டு காலத்தில் நிரூபித்துக் காட்டினோம். தேர்தல் அறிக்கையில் 55 வாக்குறுதிகளை வழங்கினோம். அதில் 85 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டது. மீதம் உள்ளவை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் சொல்லாத எத்தனையோ திட்டங்களை தீட்டி வருகிறோம்.
இன்றைய காலத்திற்கு மிக மிக தேவை 2024 நாடாளுமன்ற தேர்தல். அதில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்கான தேர்தல் அது. ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசங்களால் பிளவுபடுத்தி ஒற்றைத்தன்மையுடைய சர்வாதிகார எதேச்சதிகார நாடாக மாற்ற நினைக்கக் கூடிய பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்தி ஆக வேண்டும். பாஜகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் இதனையே ஒற்றை இலக்காக எண்ணி ஒன்று சேர வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே வெற்றி பெற்று விடலாம். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து தேசிய அரசியலை தீர்மானித்தால் இழப்பு நமக்கு தான் என்பதை அனைத்து கட்சிகளும் உணர வேண்டும். இதனை காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்து நான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டு காலமாக நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம் என்றால் அதற்கு ஒற்றுமை என்ற அடிப்படை தான் காரணம்.” எனக் கூறினார்.